Last Updated on: 15th May 2023, 10:54 am
நைப்பியிதோ: மோச்சா புயல் நேற்று மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் கரையை கடந்த நிலையில் இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக உருவெடுத்தது. இந்த புயல் இந்தியாவை நோக்கி வர வாய்ப்பில்லை என்றும், மியான்மரைதான் தாக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்தனர். இந்த எதிர்பார்ப்பை விட புயல் மேலும் வலுவடைய தொடங்கியது. சுற்றியிருந்த மேகங்களையும், காற்றில் இருந்த ஈரப்பதத்தையும் இந்த புயல் தனக்குள் இழுத்துக்கொண்டு அதிதீவிர புயலாக உருவெடுத்தது.
இதன் காரணமாக தென்னிந்தியாவில் கடும் வெப்பம் நிலவியது. இந்நிலையில் புயல் ஞாயிற்றுக்கிழமை (மே 14) கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டது. கணிக்கப்பட்டதைபோலவே நேற்று மியான்மரின் தென்கிழக்கு பகுதிக்கும் வங்கதேசத்தின் எலைக்கும் இடையே கரையை கடந்தது. கரையை கடக்கும்போது சுமார் 195 கி.மீ வேகத்தில் காற்று வீசியிருக்கிறது. பெரும் மழையும், கடுமையான காற்றும் இந்த இரண்டு பகுதிகளையும் புரட்டி போட்டிருக்கிறது.
ஏற்கெனவே புயல் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டதால், இந்த பகுதியிலிருந்து பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு தங்க வைக்கப்பட்டனர். இருப்பினும் பெரும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எனவே மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல பொருட் சேதங்கள் அதிக அளவில் நிகழ்ந்திருக்கிறது. மியான்மர் ஏழை நாடு என்பதால் இங்குள்ள வீடுகளில் பெரும்பாலானவை கூரை வீடுகளாக இருக்கிறது. மோச்சா புயல் இந்த வீடுகளை வாரி சுருட்டி சென்றிருக்கிறது.
உள்ளூர் மக்களின் கூற்றுப்படி கடந்த 10 ஆண்டுகளில் இப்படிப்பட்ட புயலை பார்த்ததில்லை என்ற சொல்கிறார்கள். ஆனால் தேவையான அளவு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் ரோஹிங்கா முஸ்லீம் அகதிகள் அதிக அளவு தங்கியிருந்த காக்ஸ் பஜார் பகுதி ஓரளவுதான் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. உயிர் சேதம் அதிக அளவில் இல்லையென்றாலும் கூட இந்த பகுதியில் தொலைத்தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. செல்போன் டவர்கள் முறிந்து விழுந்துள்ளது. அரசு மற்றும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அதேபோல மியான்மரை சுற்றியிருந்த தீவிலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்களின் நிலை என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளை அகற்றுவது, மக்களை மீட்பது, முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் போன்றவற்றை விநியோகிப்பது, போன்ற பணிகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த புயல் பாதிப்பு குறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், “தற்போதுதான் மீட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மழையும் இப்போதுதான் ஓய்ந்திருக்கிறது. எனவே புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக சொல்லிவிட முடியாது.
பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாகியுள்ளன. எனவே இவற்றையெல்லாம் சரி செய்ய சில நாட்கள் வரை ஆகும். அதன் பின்னர்தான் மொத்த சேதம் குறித்து தெரிவிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.