Last Updated on: 30th March 2023, 03:20 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் குடிமக்களும், வெளிநாட்டவர்களும் ஓய்வுக்குப் பின்னரும் பணம் சம்பாதிக்கும் வகையில் புதிய சேமிப்புத் திட்டம் ஒன்றை நேஷனல் பாண்ட்ஸ் (National bonds) அறிமுகம் செய்துள்ளது. அமீரகத்தில் தனித்துவம் மிக்க ஓய்வூதியத் திட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட நீண்ட கால திட்டத்தின் முதல் பகுதியாக தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர்கள் தங்களின் விருப்பமான வாழ்க்கை முறையை தொடர்ந்து அனுபவிக்க முடியும் என்றும் நேஷனல் பாண்ட்ஸ் கூறியுள்ளது.
இந்தத் திட்டத்தில் சேமிப்புக் கட்டம் (Saving phase) மற்றும் வருமானக் கட்டம் (Income phase) என்று இரண்டு நிலைகள் உள்ளதாக கூறப்படுகிறது. சேமிப்புக் கட்டத்தில் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் தேசியப் பத்திரங்களில் மூன்று முதல் பத்து ஆண்டுகள் வரை அவர்கள் தேர்வு செய்யும் காலத்திற்கு பணத்தைச் செலுத்த வேண்டும் என்றும், வருமான கட்டத்தில் ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்கள் அவர்கள் செலுத்தும் பணத்திற்கான வருமானத்தைப் பெற முடியும் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த புதிய சேமிப்பு திட்டத்தில், காலவரையறை மற்றும் மாத வருமானத்தின் அளவு போன்றவற்றில் முழுமையான நெகிழ்வுத் தன்மையும் வழங்கப்படுவதாக நேஷனல் பாண்ட்ஸ் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி, திடீர் தேவை, வீட்டிற்கான முன்பணம், கல்விக் கட்டணம் மற்றும் முதலீடுகள் போன்றவற்றிற்கு மொத்தமாக நிதித் தேவைப்படும்போது, வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பை மாதாந்திர வருமானத்திற்குப் பதிலாக மொத்தத் தொகையாக பெற்றுக்கொள்வதற்கான விருப்பமும் இந்த சேமிப்பு திட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேமிப்பு திட்டம் குறித்து நேஷனல் பாண்ட்ஸின் குழும தலைமை நிர்வாக அதிகாரி, நெகிழ்வான சேமிப்புத் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் பெருமிதம் கொள்வதாக கூறியுள்ளார். மேலும் கூடுதல் வருமானத்தைப் பெற விரும்புபவர்கள் அனைவரும் இது போன்ற சேமிப்புத் திட்டத்தின் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
எடுத்துக்காட்டாக, வாடிக்கையாளர்கள் 10 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 5,000 திர்ஹம் செலுத்தினால், அடுத்து வரக்கூடிய 10 ஆண்டுகளுக்கு அவர் 7,500 திர்ஹம் தொகையை ஒவொரு மாதமும் பெறலாம். அதுவே ஒருவர் ஐந்தாண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 5,000 திர்ஹம் செலுத்தி அந்த தொகையை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் பெற விரும்பினால், அந்த மூன்று ஆண்டுகளுக்கு 10,020 திர்ஹம் என்ற மாதாந்திரத் தொகையை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், நேஷனல் பாண்ட்ஸின் இந்த புதிய சேமிப்பு திட்டத்தில் இணைய விரும்பும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் 1,000 திர்ஹம்ஸ் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.