Last Updated on: 17th April 2023, 02:22 pm
துபாய்: கடந்த சனிக்கிழமையன்று துபாயில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானவர்களில் இரண்டு தமிழர்கள் உள்பட நான்கு இந்தியர்களை துபாயில் உள்ள இந்திய துணை தூதரகம் அடையாளம் கண்டுள்ளது.
உயிரிழந்த நான்கு இந்தியர்களில் இருவர் கேரளாவைச் சேர்ந்த தம்பதிகள் என்றும் மற்ற இருவரும் தீப்பிடித்த கட்டிடத்தில் பணிபுரிந்த தமிழ்நாட்டை சார்ந்த நபர்கள் என்றும் இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் அடையாளம் காணப்பட்ட இந்தியர்கள் ரிஜேஷ் கலங்கடன் (வயது 38), அவரது மனைவி ஜெஷி கண்டமங்கலத் (வயது 32), குடு சாலியகோண்டு (வயது 49) மற்றும் இமாம் காசிம் அப்துல் காதர் (வயது 43) ஆகியோர் என தெரியவந்துள்ளது.
துபாய் சிவில் பாதுகாப்பு துறை கூறுகையில் தீவிபத்து ஏற்பட்ட கட்டிடம் முறையான பாதுகாப்பு தேவைகளுக்கு இணங்காததால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் இந்த தீ விபத்தில் 16 பேர் பலியானார்கள் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர் என்றும் தெரிவித்துள்ளது.
சாலியகோண்டு வாட்ச்மேன் ஆகவும், அப்துல் காதர் பெயிண்டர் மற்றும் கார்பென்டராகவும் அந்த கட்டிடத்தில் பணியாற்றி வந்ததாக உயிரிழந்த சாலியகோண்டுவின் மூத்த சகோதரரான சாலிகா சாஹிப் குடு பாஷா தெரிவித்துள்ளார்.
கட்டிடத்தின் கீழ் தளத்தில் வசிக்கும் பாகிஸ்தானியர் ஒருவர் அவர்கள் இருவரையும் வெளியே வரச் சொன்னதாகவும், ஆனால் அவர்கள் கட்டிடத்தில் மாட்டிக்கொண்டவர்களை காப்பாற்ற விரும்பியதால் கட்டிடத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டனர் எனவும் பாகிஸ்தானிய நபர் ஒருவர் தெரிவித்ததாக பாஷா தெரிவித்துள்ளார்.
பின்னர் பிற்பகல் 3 மணியளவில் தனது சகோதரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்ததும் தானும் மருத்துவமனைக்கு சென்றதாகவும், மருத்துவமனை சென்றடைந்தபோது தனது சகோதரர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பாக வெளியேறுவதற்குப் பதிலாக, இருவரும் தரை தளத்தில் இருந்து ஓடி, ஒவ்வொரு கதவையும் தட்டி, கட்டிடத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பினர்.
உயிரிழந்த தமிழ்நாட்டை சார்ந்த மற்றோரு நபரான அப்துல் காதர் அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், அதில் ஒன்று மூன்று மாத கைக்குழந்தை என்றும், இதுவரை நேரில் சென்று பார்க்காத தனது குழந்தையை பார்க்க ரமலான் முடிந்த பின்பு ஊருக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.