Last Updated on: 8th July 2023, 08:38 am
துபாய் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, அதன் ரயில் வசதிகள், பாலங்கள் நிலையங்கள், மெட்ரோவின் உள்கட்டமைப்பு மற்றும் சுரங்கப்பாதைகள் உட்பட அனைத்திலும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் தொடர்ச்சியாக (RTA) ஆய்வுகளை நடத்தி வருகிறது.
RTA வெளியிட்டுள்ள தகவல்களின் படி, துபாய் மெட்ரோவின் பாலங்கள், நிலையங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளின் உள்கட்டமைப்பில் ஏதேனும் சாத்தியமான அபாயங்கள் உள்ளதா என்பதைக் கண்டறியவும், ரயில் பாதையில் (Rail Right-Of-Way) ஏற்படும் மீறல்களைக் கண்காணிக்கவும் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஏழு ஆய்வுப் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், ரயில் பாதுகாப்பு மண்டலங்களுக்குள் (Rail Protection Zones) உள்ள சில்லறை விற்பனை நிலையங்களுக்கான கியோஸ்க் மற்றும் வெளிப்புற இருக்கை ஏற்பாடுகள் போன்ற வசதிகளில் ஏதேனும் மீறல்கள் அல்லது சட்டவிரோத நடத்தைகள் உள்ளதா என்பதை கண்டறியவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக RTA தெரிவித்துள்ளது.
குறிப்பாக, மண்டலத்திற்குள் செயல்படும் டவர் கிரேன்கள் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்குகிறதா என்பதை RTA சோதனை செய்துள்ளது. அத்துடன், ரயில் பாதுகாப்பு மண்டலத்திற்குள் அமைந்துள்ள டெலிகம்யூனிகேஷன் டவர்களையும் (telecommunication towers) RTA சரிபார்த்ததாகக் கூறப்படுகிறது.
துபாய் மெட்ரோவில் ரெட் லைன் மற்றும் கிரீன் லைன் என்ற இரண்டு வழித்தடங்கள் உள்ளன. இது சுமார் 89.3 கிலோமீட்டர் தொலைவில் 53 நிலையங்களை இணைக்கும் வகையில் 129 ரயில்களைக் கொண்டுள்ளது. துபாய் மெட்ரோ நிலையங்களில் வழங்கப்படும் வசதிகள் மற்றும் சேவைகள் உலக அளவில் முதலிடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.