துபாயில் வசிக்கும் முஸ்லீம் அல்லாத குடியிருப்பாளர்களின் உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க தனித்துறை ஒன்றினை துபாய் நீதிமன்றம் ஒதுக்கியுள்ளது. துபாயில் முதன் முதலாக தொடங்கப்பட்டுள்ள இந்த தனித்துறையின் மூலம், முஸ்லீம் அல்லாத வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் தங்களது உரிமை சார்ந்த பிரச்சனையை தங்கள் நாட்டு சட்ட கட்டமைப்பின் கீழ் தீர்த்துக் கொள்ள முடியும்.
துபாயில் வசிக்கக்கூடிய மற்ற மதங்களின் கலாச்சார பன்முகத் தன்மையை மதிக்கும் விதமாக துபாய் அரசு இந்த முடிவினை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது.
எனவே, இந்த புதிய துறை முஸ்லீம் அல்லாதவர்களுக்கு அவர்களின் விருப்பங்களை முறைப்படுத்தவும், அவற்றை துபாய் நீதிமன்றங்களால் நிர்வகிக்கவும் ஒரு பிரத்யேக தளத்தை இந்த துறை வழங்கும்.
துபாயில் உள்ள பரம்பரை சிறப்பு நீதிமன்றத்தின் தலைவரான நீதிபதி முகமது ஜாசிம் அல்-ஷாம்சி இது குறித்து கூறும் பொழுது, இந்த முடிவு புத்திசாலித்தனமான தலைமையின் வழிகாட்டுதல்கள் மற்றும் மதிப்புமிகு துபாய் ஆட்சியாளர் அவர்களின் ஒப்புதலின் கீழ் எடுக்கப்பட்டுள்ள சிறப்பான முடிவு என்று பாராட்டியுள்ளார்.
இந்த அமைப்பு எப்படி செயல்படும்?
குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் தங்களது பரம்பரை வழக்குகளுக்கு இதில் தீர்வு காண முடியும். வழக்கில் தீர்வு காண சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள், தங்களது கோரிக்கையினை தேவையான ஆவணங்கள் மூலம் இணைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
1. முதல் வழக்கில், சட்ட அறிவிப்பு, பரம்பரை ஆவணம், சட்ட ஆவணம் அல்லது வாரிசுகள் மற்றும் அவர்களின் சொத்து பங்குகளைக் குறிப்பிடும் அதிகாரப்பூர்வ ஆவணம் ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.
2. இரண்டாவது வழக்கில், விண்ணப்பதாரர்கள் துபாய் நீதிமன்றங்கள் அல்லது துபாய் சர்வதேச நிதி மைய நீதிமன்றங்களைத் தவிர்த்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பிற நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட உயில் இருப்பதை நிரூபிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
3. மூன்றாவது வழக்கில், மேலே உள்ள ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றால், இறந்தவரின் மரணத்தை நிரூபிக்கும் மற்றும் வாரிசுகளை அடையாளம் காணும் நீதித்துறையால் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே தீர்ப்பு வழங்கப்பட்டால், அந்தத் தீர்ப்பை ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகம் அல்லது வெளியுறவு அமைச்சகம் சான்றளித்த பின்னரே துபாயில் இந்த வழக்கிற்கான கோப்பைத் திறக்க முடியும்.
2017 ஆம் ஆண்டின் சட்ட எண். 15 ன் 18 வது பிரிவு முஸ்லீம் அல்லாத பரம்பரை விவகாரங்களை நிர்வகித்தல் என்ற பிரிவின் கீழ் துபாய் அரசு இந்த தனி பிரிவினை தொடங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட உயில் மற்றும் சரியான ஆவணங்கள் இருந்தால் அவர்களுக்குரிய முறையான ஆவணங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
சம்பந்தப்பட்ட வழக்கினை தீர்க்க இந்த நிர்வாகமானது ஒற்றை அமர்வு முறையைப் பயன்படுத்துகிறது. அதாவது, ஒரு அமர்விற்குள் கோரிக்கையின் முடிவை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பரம்பரை உயில் சம்பந்தப்பட்ட முடிவு வழங்கப்பட்ட பிறகு, கோப்பு திறப்பு விண்ணப்பத்துடன் அது வழங்கப்படுகிறது.
மேலும் தெளிவுபடுத்தல் மற்றும் விசாரணைகள் தேவைப்பட்டால், “வயக்” அமைப்பு மூலம் கோப்பை திறக்க நீதிமன்றத்தின் தலைவரிடம் வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் ஒரு கோரிக்கை சமர்ப்பிக்கலாம்.
ஒருவேளை, வாரிசுகள் நாட்டிற்கு வெளியே இருந்தாலும் அல்லது தூதரக அதிகார வரம்பிற்கு வெளியே இருந்தாலும், முறையான ஆவணங்கள் காட்டப்படவில்லை என்றால், வாரிசுகளை அடையாளம் காண தேவையான வாக்குமூலம் போதுமானதாக இல்லை என நீதிமன்றம் கருதும்.
அந்த சந்தர்ப்பங்களில், விண்ணப்பதாரர்கள் “வயக்” அமைப்பின் மூலம் நீதிமன்றத் தலைவரிடம் கோரிக்கையை மறுஆய்வு செய்வதற்கும், ஒப்புதல் முடிவை வழங்குவதற்கும் அனுமதிக்கப்படுவார்கள்.
இதன் மூலம் முஸ்லிம் அல்லாதவர்கள் துபாயில் தங்களது உயில்களை பதிவு செய்வதற்கும், அவர்களது சொத்துக்களை நிர்வகிப்பதற்கும், வாரிசுரிமை தொடர்பான வழக்குகளில் தீர்வு காண்பதற்கும், வாரிசுகள் தொடர்பான சட்டசபை தீர்ப்பதற்கும் இந்த அமைப்பானது எளிதில் உதவும் எனவும் கூறப்படுகிறது.