Last Updated on: 30th May 2023, 10:50 am
துபாயின் கடற்கரை 2040 ஆம் ஆண்டுக்குள் 5 மடங்கு அதாவது 400 சதவீதம் விரிவடையும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பின் படி, தற்போது 21 கிமீ நீளமுள்ள கடற்கரைகள் அடுத்து சில வருடங்களில் 105 கிமீ தொலைவிற்கு விரிவுபடுத்தப்பட்ட பின்னர், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிக நீளமான பொது கடற்கரைகளை அனுபவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த இடங்களில் வழங்கப்படும் சேவைகள் 300 சதவீதம் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் உணவகங்கள், நீர் விளையாட்டுகள், குடும்ப பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் கடல் சரணாலயம் ஆகியவை இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பானது, ஷேக் முகம்மது அவர்கள் ஜெபல் அலி கடற்கரைக்குச் சென்று துபாய் நகர்ப்புறத் திட்டம் 2040 உடன் தொடர்புடைய உயர் அதிகாரிகளைச் சந்தித்தபோது வெளியாகியுள்ளது. இந்நிலையில், துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் கடலில் ஆமைகளை விடுவிப்பதைக் காட்டும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அத்துடன் துபாய் ஆட்சியாளர் தனது ட்விட்டர் பதிவில், 1960களில் துபாயில் முதல் நகர்ப்புறத் திட்டத்தைத் தொடங்கியதாகவும், அதில் இருந்து துபாயில் வளர்ச்சி தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதுபோல, உலகளவில் சேவைகள் மற்றும் திட்டங்களில் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம் என்றும் உறுதியளித்துள்ளார்.
இதுபோன்ற புதிய நகர்ப்புற திட்டங்கள் அடுத்த தசாப்தத்திற்கு எமிரேட்டின் பொருளாதார மற்றும் சுற்றுலா நிகழ்ச்சி நிரலை ஆதரிக்கும் என்றும், பார்வையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு சரியான இடமாக துபாய் தொடர்ந்து போட்டியிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக, உலகின் மிக அழகான மற்றும் மிகவும் வளர்ந்த நகரங்களில் ஒன்றாக துபாய் அடைந்துள்ள முன்னணி நிலையை ஒருங்கிணைப்பதே குறிக்கோள் என்று கூறிய அவர், துபாயின் பெயர் வெற்றியுடன் தொடர்புடையது மற்றும் சாத்தியமற்றதை அடைவதால் அதன் தனித்துவத்தை தொடர்ந்து நாங்கள் பாதுகாப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.