அமீரகத்தின் மனிதவளம் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தின் (MoHRE) எமிரேடிசேஷன் எனும் கொள்கை மூலம், வெளிநாட்டவர்களுக்கு பதிலாக அந்நாட்டு குடிமக்களை பணியமர்த்தும் திட்டத்தை தொடங்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் மூலம் தனியார் துறைக்குள் குறிப்பிடத்தக்க அளவில் அந்நாட்டு குடிமக்களை பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது பெரும்பாலான நிறுவனங்களின் திறமையான பதவிகளில் பணியாற்றும் எமிரேட்டியர்களின் எண்ணிக்கையானது கணிசமாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்த தகவலில் இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களின் புள்ளிவிபரங்கள் எமிரேடிசேஷன் இலக்கான 1 சதவீத அதிகரிப்புக்கு அப்பாற்பட்ட ஒரு சாதனையை காட்டுவதாகக் கூறப்படுகிறது. இது தனியார் துறை நிறுவனங்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
மேலும் இது பற்றி வெளியான புள்ளிவிபரங்களின் படி, இந்தாண்டின் முதல் பாதியின் முடிவில், சுமார் 79,000 எமிரேட்டி குடிமக்கள் தனியார் துறையின் திறமையான பதவிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 57% அதிகரிப்பைக் குறிக்கிறது.
தற்போது, கிட்டத்தட்ட 17,000 தனியார் துறை நிறுவனங்கள் எமிராட்டி குடிமக்களைப் பணியமர்த்துகின்றன. இது அமீரக அரசாங்கத்தின் முன்முயற்சியான எமிரேடிசேஷன் திட்டத்தை ஆதரிப்பதில் தனியார் துறையின் பங்களிப்பை வெளிப்படுத்துகிறது.
அதுபோல, நஃபிஸ் திட்டம் இந்த முன்னேற்றத்தில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது, செப்டம்பர் 2021 இல் Nafis திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, 50,000 க்கும் மேற்பட்ட எமிரேட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் தனியார் துறையில் சேர்ந்துள்ளனர். மேலும், தனியார் துறைக்குள் வலுவான உள்ளூர் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் அதன் வெற்றிகரமான தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.