Last Updated on: 6th July 2023, 09:00 pm
துபாயின் பட்டத்து இளவரசரான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், செவ்வாயன்று துபாயின் கிழக்கில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியான வார்சனில் 4 பில்லியன் திர்ஹம் செலவில் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கழிவு-ஆற்றல் மையத்திற்கான (Waste to Energy Centre) முதல் கட்டத்தை திறந்து வைத்துள்ளார்.
இந்த மையத்தின் மூலம் ஆண்டுக்கு 2 மில்லியன் டன் கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான தீங்கும் இல்லாமல் மின்சாரமாக செயலாக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய மையம் சுமார் 135,000 குடியிருப்பு யூனிட்டுகளுக்கு மின்சாரத்தை வழங்கும் அளவிற்கு, 220 மெகாவாட் மணிநேர புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஷேக் ஹம்தான் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “இத்தகைய தனித்துவமான திட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுக்களை நாங்கள் வாழ்த்துகிறோம். பிரகாசமான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்க மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்போது, இந்த ஆற்றல் உற்பத்தி ஆலையின் ஐந்து லைன்களில் இரண்டு செயல்படத் தொடங்கியுள்ளன, இது தற்போது தினமும் சுமார் 2,300 டன் திடக்கழிவுகளை செயலாக்கி, சுமார் 80 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்கிறது என கூறப்பட்டுள்ளது. அடுத்த இரண்டாம் கட்டத் திறப்பின் போது அதன் ஆற்றல் உற்பத்தியானது 220 மெகாவாட்டாக விரிவடையும் என்று கூறப்படுகிறது.
அதேசமயம், நிலப்பரப்பில் இருந்து கழிவுகளை திசை திருப்புவதன் மூலம் ஆண்டுதோறும் 2,400 டன் கார்பன் உமிழ்வு கட்டுப்படுத்தப்படும் என்றும், இது சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் வழிவகுக்கிறது என்றும் ஷேக் ஹம்தான் தெரிவித்துள்ளார்.
ஏறத்தாழ 3 மில்லியன் மக்களால் உற்பத்தி செய்யப்படும் தினசரி கழிவுகளை இந்த வசதியின் மூலம் ஆற்றலாக மாற்றலாம். அத்துடன் மையத்தின் மின்சாரம் உருவாக்கும் டர்பைன்களுக்குத் தேவையான நீராவியை உற்பத்தி செய்ய மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரை இந்த மையம் பயன்படுத்துகிறது. எனவே, இந்த முயற்சி முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த, பாதகமில்லாத தொழில்நுட்பம் ஆகும்.
இந்த வேஸ்ட் டு எனர்ஜி சென்டர், துபாயின் ஆற்றல் தேவைகளில் 75% தூய்மையான மூலங்களிலிருந்து பெறுவதை நோக்கமாகக் கொண்ட துபாய் கிளீன் எனர்ஜி ஸ்ட்ரேட்டஜியின் (Dubai Clean Energy Strategy 2050) முயற்சிகளை ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, எமிரேட்டின் வளர்ச்சியை உலகளாவிய முன்மாதிரியாக உயர்த்த, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, 2021 இல் இந்த முக்கியத் திட்டத்தின் கட்டுமானம் தொடங்கப்பட்டது. மேலும், முழு திட்டமும் 2024 க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, துபாயின் மக்கள்தொகை பெருகிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த திட்டம் நிலப்பரப்பில் உள்ள நகராட்சி கழிவுகளின் சாத்தியமான அளவைக் கணிசமாகக் குறைக்கும் மற்றும் மாற்று எரிசக்தி ஆதாரங்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.