Last Updated on: 3rd November 2023, 12:24 pm
ஒவ்வொரு வருட புத்தாண்டின் போதும் துபாயில் இருக்கும் உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் (Burj Khalifa) வான வேடிக்கை, லேசர் ஷோ என புத்தாண்டு மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. அது போலவே தற்பொழுது வரவிருக்கும் 2024-ம் ஆண்டு புத்தாண்டின் போதும் புர்ஜ் கலீஃபா களை கட்டப் போகின்றது என Emaar அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபாவில் நடைபெறவிருக்கும் புத்தாண்டு வானவேடிக்கை நிகழ்ச்சியை அமீரகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் இன்னும் சொல்ல போனால் அருகில் உள்ள நாடான சவூதி மற்றும் ஓமானில் இருந்தும் பார்வையாளர்கள் வருவது வழக்கமாகும். பல்வேறு இடங்களில் இருந்து இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை மக்கள் இலவசமாக கண்டு களித்தாலும் புர்ஜ் கலீஃபாவின் அருகிலேயே பார்ப்பது என்பது அரிதான விஷயமாகும்.
இவ்வாறு புர்ஜ் கலீஃபாவில் நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டத்தினை அருகில் இருந்து காண்பதற்கான கட்டண டிக்கெட்டுகள் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த டிக்கெட்டை வாங்குபவர்கள், புர்ஜ் பார்க்கில் இருந்தவாறு ஒரு தனித்துவமான வான வேடிக்கை நிகழ்ச்சியைக் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான டிக்கெட் வாங்குபவர்களுக்கு நேரடி பொழுதுபோக்கு, உணவு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பானங்கள் என மறக்க முடியாத தருணங்களை உத்தரவாதம் அளிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
டிக்கெட் விவரங்கள்:
பெரியவர்களுக்கான டிக்கெட் கட்டணம் 300 திர்ஹம்ஸாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் 5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 150 திர்ஹம்சாகும். அதேவேளை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக செல்லலாம். மேலும், இந்த டிக்கெட்டுகள் நவம்பர் 10 முதல் பிளாட்டினம்லிஸ்ட்டில் (Platinumlist) விற்பனைக்கு வரும் என்று Emaar Properties தெரிவித்துள்ளது.
அத்துடன் Emaar NYE கொண்டாட்டத்திற்கான டிக்கெட் வைத்திருப்பவர்கள் துபாய் மால், துபாய் ஹில்ஸ் மால் மற்றும் துபாய் மெரினா மால் ஆகியவற்றிலிருந்து டிசம்பர் 26-30 அன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை தங்கள் பேட்ஜ்களை சேகரிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், புர்ஜ் பார்க்கிற்குள் நுழைவதற்கும் குறிப்பிட்ட பகுதிகளை அணுகுவதற்கும் இந்த பேட்ஜ் சேகரிப்பு கட்டாயமாகும்.
புத்தாண்டுக் கொண்டாட்டம்:
ஒவ்வொரு டிக்கெட்டிலும் ஒதுக்கப்பட்ட உணவுக் கடைகளில் இருந்து ஒரு உணவும் இரண்டு பானங்களும் கிடைக்கும். புர்ஜ் பார்க்கில் பல்வேறு ஃபுட் டிரக்குகள், ஸ்டால்கள், நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் பிற நிகழ்வுகளையும் கண்டு ரசிக்கலாம். இது மாலை 4 மணிக்கு திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் புத்தாண்டை வரவேற்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் டிசம்பர் 31 அன்று பிற்பகலில் புர்ஜ் பார்க்கிற்கு வரத் தொடங்கிவிடுகிறார்கள். மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏராளமான மக்கள் ஆன்-சைட் மற்றும் தொலைக்காட்சிகள் வழியாக பார்த்து ரசிக்கிறார்கள். இது உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.