Last Updated on: 18th July 2023, 11:23 am
இந்தாண்டின் முதல் ஆறுமாதங்களில் மட்டும் ஏறத்தாழ 8.5 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச பார்வையாளர்களை துபாய் வரவேற்றுள்ளது. துபாயின் பட்டத்து இளவரசரும் நிர்வாகக் குழுவின் தலைவருமான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட 2023 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் துபாயின் பொருளாதார முன்னேற்றம் குறித்த அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, துபாய் ஃபைனான்சியல் மார்க்கெட் (DFM) 14 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் (listed companies) சந்தை மதிப்பு 71 பில்லியன் திர்ஹம் அதிகரித்து 652 பில்லியன் திர்ஹம்களை எட்டியது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் ரியல் எஸ்டேட் துறை கணிசமாக உயர்ந்து, மொத்த பரிவர்த்தனைகள் 285 பில்லியன் திர்ஹம்களாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய ஷேக் ஹம்தான், இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சியானது, துபாயில் உள்ள பெரிய முதலீட்டாளர்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு சான்றாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தாண்டின் முதல் பாதியில் பதிவான துபாயின் பொருளாதார முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதால், அடுத்த ஆறு மாதங்களுக்கான பொருளாதார முடிவுகள் பற்றிய கண்ணோட்டத்தை அதிகப்படுத்துவதாகவும், 2024 ஆம் ஆண்டில் ஒரு வலுவான பொருளாதார தொடக்கத்தை எதிர்நோக்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேசமயம், துபாய் எகனாமிக் அஜெந்தா D33 இன் இலக்குகளுக்கு பங்களிக்கும் வகையில் வணிக சூழலை மேலும் மேம்படுத்தவும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும் முயற்சிப்பதாகவும் ஷேக் ஹம்தான் தெரிவித்துள்ளார்.