Last Updated on: 21st August 2023, 12:27 pm
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலக மக்கள் மத்தியில் பிரபலமான நாடாகும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பணக்காரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாழவும், தங்கவும், வேலை செய்வதையும் கனவாக வைத்துள்ளனர். அபுதாபி, அஜ்மான், துபாய், புஜைரா, ராஸ் அல் கைமா, ஷார்ஜா மற்றும் உம்முல் குவைன் ஆகிய ஏழு எமிரேட்டுகளின் கூட்டமைப்புதான் ஐக்கிய அரபு அமீரகம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் குடிமகனாக மாறுவதற்கும், எமிரேட்ஸை தங்களின் சொந்த ஊராகவும் வைத்துக் கொள்ள ஒரு வழி ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவைப் பெறுவதுதான். அமீரகத்தின் “கோல்டன் விசா” எனப்படும் நீண்ட கால விசாவில் சர்வதேச திறமையாளர்கள் UAE இல் வசிக்க முடியும். அவர்கள் அங்கு வேலை செய்யவும் படிக்கவும் முடியும்.
அதே நேரத்தில் மேலும் பல கூடுதல் நன்மைகளையும் அனுபவிக்க முடியும். முதலீட்டாளர்கள், வணிக உரிமையாளர்கள், விஞ்ஞானிகள், சிறந்த மாணவர்கள் மற்றும் சமீபத்திய பட்டதாரிகள், மனிதாபிமானத்தில் முன்னோடிகளாக இருப்பவர்கள் மற்றும் முன்னணி ஹீரோக்கள் ஆகியோருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாவை வழங்கி வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதன் குடியேற்றக் கொள்கையில் பல மாற்றங்களை செய்துள்ளது. இதன்மூலம் உலகின் குடியேற்ற மையமாக எமிரேட்ஸ் மாறும் என நம்பப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் மொத்த மக்கள் தொகையில் 38% இந்தியர்கள்தான் உள்ளனர். மற்ற வளைகுடா நாடுகளைப் போலல்லாமல், கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் ஸ்பான்சர் அல்லது வேலை இல்லாமலேயே UAE இல் இருக்க முடியும்.
கோல்டன் ரெசிடென்ஸ் செல்லுபடியாகும் வகையில் UAE க்கு வெளியே தங்குவதற்கு நேர வரம்பில்லை. முன்னதாக, விசா வைத்திருப்பவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றால் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குத் திரும்ப வேண்டும், ஆனால் இப்போது அந்த அவசியம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா சில பிரத்யேக சலுகைகளையும் வழங்கியுள்ளது. அதன்படி 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் நீண்ட கால, புதுப்பிக்கத்தக்க குடியிருப்பு விசா வழங்கப்படுகிறது. கோல்டன் விசா வைத்திருப்பவருக்கு ஸ்பான்சர் தேவை இல்லை. மேலும் கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் 6 மாதங்களுக்கு மேலும் எமிரேட்ஸை விட்டு வெளியே தங்கலாம்.
கோல்டன் விசாவை முதன்மையாக வைத்திருப்பவர் இறந்துவிட்டால், அதன் அனுமதி காலம் முடியும் வரை குடும்ப உறுப்பினர்கள் UAE-ல் தங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமீரகம் தற்போது கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளதால், கோல்டன் விசாவை பெறுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.