Last Updated on: 15th July 2023, 10:13 am
ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தும்போது, UAE சைபர் கிரைம் சட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள விதிகளுக்கு இணங்குவது அவசியம். இல்லையெனில், சிறைத்தண்டனையுடன் 1 மில்லியன் திர்ஹம் வரை அபராதம் செலுத்த நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஆகவே, அமீரகத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது பொறுப்புடன் செயல்பட வேண்டும். நீங்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது கருத்தில் கொள்ள வேண்டிய சில அடிப்படை வழிகாட்டுதல்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு மதம் சார்ந்த பதிவுகளை வெளியிடுவது:
அமீரகத்தில் இஸ்லாம் அல்லது வேறு எந்த அங்கீகரிக்கப்பட்ட மதங்களையும் இழிவுபடுத்தும் அல்லது புண்படுத்தும் வகையில் வீடியோக்களையோ, பதிவுகளையோ போஸ்ட் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மீறினால், அமீரக சைபர் கிரைம் சட்டத்தின் பிரிவு 37 இன் படி, ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 250,000 முதல் 1 மில்லியன் திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பதிவுகள்:
பெண்களை இழிவுபடுத்தும் பதிவுகள் அல்லது குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் பதிவுகள், மனித கடத்தல், ஆபாசப் படங்கள், விபச்சாரம் போன்ற பொது ஒழுக்கத்திற்கு எதிரான செயல்கள் பற்றிய விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். இதுபோன்ற குற்றங்களுக்கு ஒரு வருடம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 250,000 முதல் 1 மில்லியன் திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அரசாங்கம் தொடர்பான பதிவுகள்:
அரசாங்கம் அல்லது அரசாங்கத் துறைகள், ஆளும் ஆட்சி, சின்னங்கள், நாட்டின் அரசியலமைப்பு மற்றும் பிற நாடுகளுக்கு எதிரான எந்தவொரு பதிவுகளையும் இடுகையிடுவதைத் தவிர்க்க வேண்டும். இத்தகைய குற்றங்கள் UAE சைபர் கிரைம் சட்டத்தின் பிரிவு 20 முதல் பிரிவு 28 வரையிலான விதிகளின்படி, மிகவும் கடுமையானதாகக் கருதப்படுகின்றன. அதுமட்டுமின்றி, நாட்டில் உள்ள பொதுத்துறை ஊழியர்களை சமூக ஊடகங்கள் மூலம் அவமதிப்பதும் குற்றமாக கருதப்படுகிறது.
பிறரைப் பற்றிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பதிவிடுவது:
பிறரது அனுமதியின்றி அவர்கள் சம்பந்தப்பட்ட புகைப்படம் அல்லது வீடியோ காட்சிகளைப் பதிவிடுவது மற்றும் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தல், அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து தவறான தகவல்களைப் பரப்புவது, வதந்திகள் அல்லது அவதூறுகளில் ஈடுபடுவது போன்றவை சட்டவிரோதச் செயல்களாகும்.
அதுபோல, பிறரது பிரைவசியைக் கெடுக்கும் வகையில் புகைப்படம், வீடியோக்கள் அல்லது கருத்துகளை இடுகையிட்டால், சைபர் கிரைம் சட்டத்தின் 44 வது பிரிவின் கீழ் குறைந்தபட்சம் ஆறு மாத சிறைத்தண்டனை மற்றும் 150,000 முதல் 500,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
குறிப்பாக, சோஷியல் மீடியா இன்ப்ளூயன்சராக இருக்கும் நபர் கட்டண விளம்பரத்தை ஏற்க விரும்பினால், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தேசிய மீடியா கவுன்சில் அல்லது பொருத்தமான ஒழுங்குமுறை அமைப்பிலிருந்து உரிமம் பெறுவது நல்லது.