Last Updated on: 10th July 2023, 10:36 am
ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீப காலமாகவே கடும் வெப்பநிலை பதிவாகி வருகின்றது. பொதுவாகவே வளைகுடா நாடுகளில் கோடை காலத்தில் அதிக வெப்பதிலை பதிவாகி வரும் என தெரிந்திருந்தாலும் வருடம் செல்ல செல்ல அதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. இந்நிலையில் அமீரகத்தில் நேற்று சனிக்கிழமையன்று வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை நெருங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக அபுதாபியில் உள்ள அல் தஃப்ரா பகுதியில் உள்ள ஹமீம் பகுதியில் சனிக்கிழமை மாலை 3.15 மணியளவில் 49.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவித்துள்ளது.
அதேநாளில், அபுதாபியின் மொசைராவில் மாலை 4 மணியளவில் 49.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், துபாயின் மார்காமில் 47.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
இந்த வெப்பநிலை நாட்டில் கோடை காலத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்சம் அல்ல என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, 2021 ஆம் ஆண்டில், வெப்பநிலை மூன்று நாட்களில் இரண்டு முறை 51 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது.
இந்நிலையில், ஜூலை 3 ஆம் தேதி பூமி அதன் அதிகபட்ச உலகளாவிய சராசரி வெப்பநிலையை எட்டியதால், அடுத்த ஆண்டுகளில் கோடை காலம் இன்னும் வெப்பமடையக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து துபாயின் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் ஸ்ரீஜித் பாலசுப்ரமணியன் அவர்கள் கூறிய கருத்துப்படி, அமீரகத்தில் 2050-ல் சராசரி வெப்பநிலை 2.21C முதல் 2.38C ஆகவும், 2100-க்குள் 3.64 முதல் 3.91C ஆகவும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக, அமீரகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் (Ministry of Climate Change and Environment) தரவுகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த அதிகரிப்பு எதிர்பாராதது இல்லை என்றும், நாட்டில் 1990 ஆம் ஆண்டு முதல் கோடை மாதங்களில் வெப்பமயமாதலின் வெப்பநிலை தீவிரமான அதிகரிப்பைக் கண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.