Last Updated on: 30th March 2023, 04:38 pm
சவுதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டினர் தங்களுக்குப் புதிதாக பிறந்த குழந்தைகளை அரசாங்க சேவை போர்ட்டல் மூலம் எலெக்ட்ரானிக் முறையில் பதிவு செய்யலாம் என்று சவுதியின் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. சிவில் விவகாரங்களுக்கான உள்துறை அமைச்சகத்தின் ஏஜென்சி வழங்கும் ‘அப்ஷர் (Absher)’ என்ற போர்ட்டலில் வெளிநாட்டினரின் புதிதாகப் பிறந்த குழந்தைகள் குறித்து இ-பதிவு செய்யலாம் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த போர்ட்டல் வழியாக பதிவு செய்த பின்னர், வெளிநாட்டவர்கள் பிறப்புச் சான்றிதழை அவர்களின் ரெசிடென்ஸ் முகவரிக்கு வழங்குமாறு கோரலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, சவூதி அரேபியா டிஜிட்டல்மயமாக்கலுக்கு தீவிரமாக மாறிவருகிறது. அதன் ஒரு பகுதியாக சவுதியில் உள்ள வெளிநாட்டினருக்காக இது போன்ற இ-சேவைகளின் தொகுப்பை சவூதி அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
கடந்த மாதம், சவுதி அரேபிய நீதித்துறை அமைச்சகம், வெளிநாட்டவர் தனது திருமண ஒப்பந்தத்தை நீதிமன்றத்தில் நடத்தலாம் அல்லது மனைவி விசிட் அல்லது டிரான்சிட் விசாவில் சவுதிக்கு வந்தால் அதற்கு ஒப்புதல் பெறலாம் என்றும் அறிவித்தது. ஆனால், கணவன் மற்றும் மனைவியின் தந்தை சவுதி அரேபியாவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அதேசமயம், திருமணமான தம்பதிகள் விசிட் விசாவில் நாட்டிற்குள் நுழைந்தால், திருமண ஒப்பந்தத்தை அமைச்சகத்தின் நஜிஸ் (Najiz) போர்ட்டல் மூலமாகவும் அங்கீகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இந்த சேவையை நஜிஸ் போர்ட்டல் வழியாகப் பெறவும் மற்றும் முழுமையாகச் செயல்படுத்தவும் வேண்டுமெனில், அனைத்து தரப்பினரும் அப்ஷர் தளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில், சவூதி குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு அரசாங்க சேவைகளை அணுக உதவும் வகையில், ராஜ்யத்தின் உள்துறை அமைச்சகம் அப்ஷர் செயலியை அறிமுகப்படுத்தியது.
அதன்பிறகு, சவுதி அரேபியாவில் வேலைகளுக்கு விண்ணப்பித்தல் மற்றும் பாஸ்போர்ட், ரெசிடென்ஸ் அட்டைகள் மற்றும் ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பல சேவைகளை இதன் மூலம் அணுகவும் அப்ஷர் தளம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.