Last Updated on: 19th June 2023, 12:33 pm
இஸ்லாமிய மாதமான துல் ஹஜ்ஜின் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு சவுதி அரேபியாவில் காணப்பட்டதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. எனவே இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் கடைசி மாதமான துல் ஹஜ், நாளை ஜூன் 19 திங்கட்கிழமை முதல் தொடங்குகிறது.
அதன்படி, வரும் ஜூன் 27, செவ்வாய்க் கிழமை அரஃபா நாள் தினமாகவும், அதற்கு அடுத்த நாள் ஜூன் 28, புதன்கிழமை அன்று ஈத் அல் அதா பெருநாள் கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் இரண்டு பெரிய பண்டிகைகளில் ஒன்றான ஈத் அல் அதா என்பது, இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபி தனது மகன் இஸ்மாயிலை இறைவனின் கட்டளைப்படி தியாகம் செய்ய விரும்பியதை நினைவுபடுத்தும் தியாக திருநாளாக உலக முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகமும் சவுதியையே பின்பற்றும் என்பதால் அமீரகத்திலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.