Last Updated on: 16th July 2023, 10:28 am
கத்தார் அரசானது குளிரூட்டப்பட்ட ஜாகிங் டிராக்குகளுடன் கூடிய புதிதாக ஒரு பெரிய பொதுப் பூங்காவை கத்தாரில் உள்ள ராவ்தத் அல் ஹமாமாவில் விரைவில் பயண்பாட்டிற்கு கொண்டுவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுப் பூங்காவானது, அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் பயன்படுத்தும் வகையில் மிக பெரிய பரப்பளவில் உருவாக்கப்பட்டு வருகின்றது. நகரின் மையத்தில் அமைக்கப்படும் இந்த பூங்காவானது கூடிய விரைவில் திறக்கப்படும் என்று கத்தாரில் உள்ள சாலைகள் மற்றும் பொது இடங்களை அழகுபடுத்துவதற்கான மேற்பார்வைக் குழுவின் திட்ட மேலாளர் ஜாசிம் அப்துல்ரஹ்மான் ஃபக்ரூ கூறியுள்ளார்.
சமீபத்தில் இது குறித்து அவர் தெரிவிக்கையில், பூங்காவில் தனித்துவமாக குளிரூட்டப்பட்ட ஜாகிங் டிராக்குகள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், ஜாக்கிங் செல்பவர்களின் வசதிக்காக குளிரூட்டப்பட்ட பாதைகளை அமைப்பது கோடைகாலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் விவரித்துள்ளார்.
மேலும், இந்த பூங்காவானது பல மரங்களுடன் கூடிய பெரிய பசுமையான இடங்களைக் கொண்டிருக்கும் என்றும் அதோடு, பெரும்பாலான வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான வாகன நிறுத்துமிடங்கள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெவ்வேறு வயதுக் குழந்தைகளுக்கான தனித்தனியான விளையாட்டுப் பகுதிகளும் இதில் இருக்கும் என்வும் ஃபக்ரூ கூறியுள்ளார். இந்த பூங்காவின் சிறப்பம்சத்தை கூறிய அவர், மற்ற பூங்காக்களுடன் ஒப்பிடும்போது ஆயிரக்கணக்கான சதுர மீட்டர் வித்தியாசத்துடன் இந்த பூங்கா அளவில் பெரியதாக இருக்கும் என்று விவரித்துள்ளார்.
கத்தாரில் சாலைகள் மற்றும் பொது இடங்களை அழகுபடுத்துவதற்கான குழுவின் எதிர்காலத் திட்டத்தைப் பற்றி அவர் மேலும் கூறுகையில், “கடற்கரைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, பொது கடற்கரைகளை மேம்படுத்துவது, புதிய கடற்கரைகளைத் திறப்பது மற்றும் பல புதிய பூங்காக்களை உருவாக்குவது போன்ற திட்டங்கள் எங்கள் லட்சியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொது பூங்காக்கள் மற்றும் கடற்கரை போன்ற பகுதிகளுக்கு மக்கள் செல்வதுடன் குழந்தைகளையும் அழைத்துச் செல்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற மக்களை ஊக்குவிப்பதையும் குழு நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே, அனைத்து வயதினருக்கும் சேவை செய்யும் வகையில் சுற்றுப்புற பூங்காக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.