Last Updated on: 19th August 2024, 02:46 pm
நெருங்கிய தொடர்பு மூலம் பரவும் வைரஸ் தொற்றான Mpoxஇன் முதல் பாதிப்பு தங்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாக ஸ்வீடன் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம், ஆப்பிரிக்காவில் தற்போது தீவிரமாக பரவி வரும் Mpox வைரஸ், ஆப்பிரிக்க கண்டத்தைக் கடந்து ஐரோப்பிய கண்டத்திற்கும் பரவ தொடங்கியுள்ளது.இதுதொடர்பாக வெளியான அறிக்கைகளின்படி, ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில் தங்கியிருந்த போது ஸ்வீடனைச் சேர்ந்த அந்த நபர் பாதிக்கப்பட்டார் என்றும், அவர் ஸ்டாக்ஹோமில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆப்பிரிக்காவிலும் பிற இடங்களிலும் Mpox பரவி வரும் நிலையில், இந்த தொற்றை உலகளாவிய சுகாதார அவசரநிலை என்று அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Mpox என்றால் என்ன?
குரங்கம்மை என்றும் அழைக்கப்படும் Mpox, முதன்முதலில் 1958ஆம் ஆண்டில் குரங்குகளில் அம்மை போன்ற நோய் பரவியபோது விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டது.சமீப காலம் வரை, மனிதர்களிடையே பெரும்பாலான பாதிப்புகள் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த மக்களில் காணப்பட்டன.
2022ஆம் ஆண்டில், இந்த வைரஸ் முதன்முறையாக உடலுறவு மூலம் பரவுவது உறுதிசெய்யப்பட்டது மற்றும் உலகெங்கிலும் 70 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியது. Mpox பெரியம்மை போன்ற வைரஸ்களின் குடும்பத்தைச் சேர்ந்தது.ஆனால் காய்ச்சல், குளிர் மற்றும் உடல் வலி போன்ற லேசான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. மிகவும் தீவிரமாக பாதிக்கப்படுபவர்களுக்கு முகம், கைகள், மார்பு மற்றும் பிறப்புறுப்புகளில் புண்களை உருவாக்கலாம்.