Last Updated on: 4th October 2024, 05:03 pm
தெற்கு ஜப்பானில் இருக்கும் கியூஷூ தீவில் மியாஸாக்கி விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலைய முனையத்திற்குக் குறைந்தது 100 மீட்டர் தொலைவில் திடீரென குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.இரண்டாம் உலகப் போரின்போது வீசப்பட்ட அமெரிக்க வெடிகுண்டு வெடித்ததால் விமான நிலையம் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதுகுறித் ஜப்பானின் போக்குவரத்து அமைச்சகத்தின்படி, வெடிகுண்டு அகற்றும் குழு, போர்க்காலத்தின்போது வான்வழித் தாக்குதலில் நிலத்தின் அடியில் புதைந்த அமெரிக்க வெடிகுண்டால் வெடித்தது என்பதை உறுதிப்படுத்தியது.இந்த குண்டுவெடிப்பு டாக்ஸிவேயில் 7 மீட்டர் அகலமும் 1 மீட்டர் ஆழமும் கொண்ட பள்ளத்தை உருவாக்கியது, இதனால் ஓடுபாதையை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. மேலும் வெடிப்புகள் ஏற்படும் அபாயம் இல்லை என்றாலும், 87 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.பள்ளத்தை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது, குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.இதற்கிடையே, வெடிக்காத குண்டுகள் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கின்றன. போர் முடிவடைந்து 79 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட போதிலும், மியாசாகி விமான நிலையத்தில் வெடிக்காத பல குண்டுகள் இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் மட்டும், 37.5 டன் எடையுள்ள 2,348 குண்டுகளை தற்காப்புப் படைகள் அப்புறப்படுத்தியுள்ளன.முதலில் இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய கடற்படைத் தளமாக இருந்த மியாசாகி விமான நிலையம் பின்னர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டது. மியாசாகி மாகாணத்தில் அமைந்துள்ள இது உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு சேவை செய்யும் பிராந்திய விமான நிலையமாகும்.இது ஒரு 2,500 மீட்டர் ஓடுபாதை மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச செயல்பாடுகளைக் கையாளும் ஒற்றை முனையத்தைக் கொண்டுள்ளது.