பெய்ஜிங்: க்ரீன் எனர்ஜி மற்றும் டேட்டா பிராசஸிங் சென்டர்கள் இந்தக் காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் சில குறிப்பிட்ட கனிமங்களுக்கான தேவை பயங்கரமாக அதிகரித்துள்ளது. இதை வைத்து இப்போது பக்காவாக காய் நகர்த்தும் சீனா, வரும் காலத்தில் உலகையே தனது கட்டுக்குள் வைத்திருக்கக் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது.
இந்த நவீன காலகட்டத்தில் எல்லாமே தொழில்நுட்பம் சார்ந்து நகர்ந்து வருகிறது. உலகம் இப்படி ஸ்மார்ட் கருவிகளைக் கொண்டதாக மாறும் சூழலில், இதற்கான எனர்ஜி தேவையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
இப்போது பருவநிலை மாற்றம் குறித்த கவலைகளையும் அதிகரித்துள்ளதால் உலக நாடுகள் கிரீன் எனர்ஜி எனப்படும் மாசில்லாத எனர்ஜி உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகிறது. மேலும், இதனால் சில குறிப்பிட்ட கனிமங்களின் தேவையும் அதிகரித்துள்ளது. வரும் காலத்தில் இந்த கனிமங்களின் தேவை அதிகரிக்கும் என்பதை உணர்ந்த சீனா இதன் மீதான தனது பிடியை வலுப்படுத்தி வருகிறது.
இதற்காகக் கடந்த சில ஆண்டுகளாகவே சீன நிறுவனங்கள் உலகெங்கிலும் உள்ள பெரிய சுரங்கங்களில் அதிக முதலீடு செய்து வருகிறது. முக்கிய வளங்கள் மீது தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைக்க வேண்டும் என்பதற்காகவே சீனா இதைச் செய்து வருகிறது. சீனா இதுபோல உலகெங்கும் உள்ள முக்கிய சுரங்கங்களைத் தன்வசப்படுத்தினால் வரும் காலத்தில் ஒட்டுமொத்த உலகிற்கும் அது சிக்கலாக மாறலாம்.
உலகம் முழுக்க மாற்றம்:
அதேபோல மின்சார வாகன பேட்டரிகளுக்கு அத்தியாவசியமாக உள்ள லித்தியம் மற்றும் கோபால்ட் போன்ற கனிமங்களிலும் சீனாவின் முதலீடு அதிகரித்து வருகிறது. உதாரணமாக, லித்தியம் எடுக்க அர்ஜென்டினா முதல் ஆஸ்திரேலியா வரை பல சுரங்கங்களில் சீனா முதலீடு செய்து வருகிறது.
இப்போது சர்வதேச அளவில் சீனா சுரங்க நிறுவனங்கள் தான் கனிம உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. கனிம உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமின்றி, அதைத் தனது நாட்டிற்குக் கொண்டு வந்து பல்வேறு துறைகளிலும் சீனா பயன்படுத்தி வருகிறது.. கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சீனாவின் தாமிரம், கோபால்ட், பாக்சைட் இறக்குமதி அதிகரித்துள்ளது. இதன் மூலம் சீனா பேட்டரிகள், சோலார் பேனல்கள் மற்றும் மின்சார வாகனங்கள் தயாரிப்பை அதிகரித்துள்ளது.