ஆஸி.,க்கு எதிரான முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி: ஜெய்ஸ்வால் 150 ரன் விளாசல்!

பெர்த்:

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 360 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது. துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் குவித்தார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘பார்டர்- கவாஸ்கர்’ டிராபி தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 104 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் பும்ரா 5, ஹர்ஷித் 3, சிராஜ் 2 விக்கெட் கைப்பற்றினர். பின் 46 ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கியது இந்திய அணி.

ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாற, ராகுல், ஜெய்ஸ்வால் அசத்தினர். ஆஸ்திரேலிய ‘வேகங்களை’ எளிதாக சமாளித்தனர். இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி, 172 ரன் எடுத்து, 218 ரன் முன்னிலையுடன் வலுவான நிலையில் இருந்தது. ராகுல் (62), ஜெய்ஸ்வால் (90) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று (நவ.,24) 3வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது இந்திய அணி. ராகுல் 77 ரன்னில் ஸ்டார்க் பந்தில் கேட்சானார். அடுத்துவந்த தேவ்தத் படிகல் 25 ரன்னில் வெளியேறினார். பின்னர் ஜெய்ஸ்வாலுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால், 150 ரன்களை கடந்து, 161 ரன்களில் அவுட்டானார். 94 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் சேர்த்து 360 ரன்கள் முன்னிலை பெற்று வலுவாக இருந்தது. விராட் கோலி 16 ரன், ரிஷாப் பன்ட் விளையாடி வருகின்றனர்.

Prayer Times