3 ஆயிரம் கார்களுடன் சென்ற சரக்கு கப்பலில் தீ: இந்தியர் ஒருவர் உயிரிழப்பு, 20 பேர் காயம்

லண்டன்: நெதர்லாந்து கடற்பகுதியில் 3 ஆயிரம் கார்களுடன் சென்ற சரக்கு கப்பல் தீப்பற்றியதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர்.

ஜெர்மனியில் இருந்து சுமார் 3,000 கார்களுடன் ‘ஃப்ரீமேன்டில் ஹைவே’ என்ற சரக்கு கப்பல் எகிப்து நோக்கி புறப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நெதர்லாந்து நாட்டின் அமெலாண்ட் தீவு அருகே சென்று கொண்டிருந்தபோது கப்பலில் அடுக்கப்பட்டிருந்த 25 எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று திடீரென தீப்பற்றியது.

தீ மளமளவென மற்ற கார்களுக்கும் பரவியது. தீயை அணைக்க கப்பல் பணியாளர்கள் மேற்கொண்ட 16 மணி நேர முயற்சி தோல்வி அடைந்தது. தகவலின் பேரில் நெதர்லாந்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். கரும் புகையுடன் எரிந்து கொண்டிருக்கும் கப்பலின் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தக் கப்பலில் 23 ஊழியர்கள் இருந்தனர். இவர்களில் பலர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் தீவிபத்தில் இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர்.

தீ விபத்து காரணமாக 7 பேர்கடலில் குதித்தனர். இவர்களையும்,கப்பலில் இருந்தவர்களையும் நெதர்லாந்து கடலோர காவல் படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் நெதர்லாந்தில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், “உயிரிழந்த இந்தியரின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்து வருகிறோம்.

இந்தியரின் உடலை தாயகம் அனுப்பி வைக்க உதவி வருகிறோம், காயம் அடைந்த 20 ஊழியர்களுடன் தொடர்பில் உள்ளோம். அவர்கள் பத்திரமாக உள்ளனர். மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். கப்பல் நிறுவனம் மற்றும் நெதர்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து தேவையான உதவிகள் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளது.

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times