ஹாரி பாட்டர் புத்தகத்தின் திருத்தப்படாத பிரதி ரூ.15 லட்சத்துக்கு ஏலம்!

லண்டன்: உலகப் புகழ் பெற்ற ஹாரி பாட்டர் முதல் பாகத்தின் திருத்தப்படாத பிரதி இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.15 லட்சத்துக்கு மேல் ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

1997ஆம் ஆண்டு ஜே.கே.ரவுலிங் எழுதிய ‘ஹாரி பாட்டர் அண்ட் தி ஃபிளாசஃபர்ஸ் ஸ்டோன்’ புத்தகம் வெளியானது. இந்த புத்தகம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை எழுதினார் ரவுலிங். இதனையடுத்து ஹாரி பாட்டர் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்களும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. 2007ஆம் ஆண்டு வெளியான ‘ஹாரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ்’ புத்தகத்துடன் இந்த கதை நிறைவடைந்தது.

இந்த நிலையில் ஹாரி பாட்டர் கதைகளின் முதல் பாகமான ‘ஹாரி பாட்டர் அண்ட் தி ஃபிளாசஃபர்ஸ் ஸ்டோன்’ புத்தகத்தின் திருத்தப்படாத அசல் பிரதி £15,000க்கு (இந்திய மதிப்பில் ரூ.15 லட்சத்துக்கு) ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. இங்கிலாந்தின் ஃபாரிங்டன் நகரத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் இந்த புத்தகத்தை வாங்கியுள்ளார். சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக தனது ஊரில் உள்ள அருங்காட்சியகத்தில் இந்த புத்தகத்தை வைக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புத்தகம் பதிப்பிக்கப்படுவதற்கு முன்பாக வெறும் 1 பவுண்டுக்கு வாங்கப்பட்டு லண்டனில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியின் நூலகத்தில் வைக்கப்பட்டது. அந்த நேரத்தில் இந்த கதை உலகப் புகழ் அடையும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times