Last Updated on: 25th May 2023, 06:52 pm
அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்தில், பயணி ஒருவரின் கைப்பைக்குள்ளிருந்து வித்தியாசமான சத்தம் கேட்பதை கவனித்த அதிகாரிகள், அவரது பையை சோதனையிட்டனர்.
கண்ட வியப்பூட்டும் காட்சி:
நிகராகுவா நாட்டிலிருந்து மியாமிக்கு விமானத்தில் வந்த, Szu Ta Wu என்னும் பயணியின் கைப்பையிலிருந்து வித்தியாசமான சத்தம் வந்ததைத் தொடர்ந்து, அவரை அதிகாரிகள் சோதனையிட்டார்கள்.அப்போது, அவரது பைக்குள் 29 முட்டைகள் இருந்தது தெரியவந்துள்ளது. அவற்றில் ஒரு முட்டையிலிருந்து பறவைக் குஞ்சு ஒன்று வெளிவந்துள்ளதைக் கண்ட அதிகாரிகள் வியப்பிலாழ்ந்துள்ளனர்.
உடனடியாக அமெரிக்க வன விலங்குகள் சேவை அதிகாரிகளை அழைத்துள்ளார்கள் விமான நிலைய அதிகாரிகள்.அவர்கள் வருவதற்குள் எட்டு முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவந்துவிட்டன. அதிகாரிகள் அவற்றை மரபியல் முறைப்படி சோதனை செய்தபோது, அவை, yellow naped Amazon மற்றும் red-lored Amazon என்னும் அபூர்வ வகைக் கிளிகள் என்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள். இந்தக் கிளிகள் 70 ஆண்டுகள் வரை வாழுமாம். தற்போது அவை பாதுகாப்பாக காப்பகம் ஒன்றில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
பயணிக்கு 20 ஆண்டுகள் வரை சிறை:
அந்த அபூர்வ பறவைகளைக் கடத்தி வந்ததாக Szu Ta Wu கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இதற்கிடையில், அவை என்ன பறவைகள் என்பது தனக்குக் தெரியாது என்று கூறியுள்ள Szu Ta Wu, நண்பர் ஒருவர் அவற்றைக் கொண்டு வருவதற்காக தனக்குப் பணம் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.இந்த அபூர்வப் பறவைகள் கடத்தல்காரர்களால் அதிகம் தேடப்படும் பறவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.