Last Updated on: 10th July 2023, 05:21 pm
ஸ்பெயினில் இருந்து லிவர்பூல் நகருக்கு பிரிட்டனைச் சேர்ந்த ஈசி ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் கடந்த 5ஆம் திகதி புறப்பட தயாராக இருந்த நிலையில் ஓவர் லோடு காரணமாக 19 பயணிகளை இறக்கிவிட்டுச்சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் அங்கு தட்பவெப்ப நிலை மாறியதால் கடும் காற்றும் வீசியது. அதிவேகமாக வீசிய காற்று மற்றும் குறுகிய ரன்வே கொண்ட விமான நிலையம் என்பதால் அங்கு விமானம் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.
அதிவேகமாக வீசிய காற்று
பயணிகள் முழுவதுமாக இருந்தநிலையில், அங்கு நிலவிய காலச்சூழலுக்கு விமானம் இவ்வளவு எடையுடன் டேக் ஆப் ஆவது கடினம் என்பதை விமானி உணர்ந்தார். இதையடுத்து விமான நிறுவனத்திடம் பேசிய விமானி, விமானத்தில் உள்ள பயணிகளில் 20 பேர் இறங்கினால் எடை குறைந்து விமானம் சிக்கலின்றி டேக் ஆப் ஆகிவிடும் என கூறிய விமானி, விமானத்திலிருந்து யார் இறங்க வேண்டும் என்பதை பயணிகளே முடிவுசெய்து கொள்ளலாம் எனவும் கூறினார்.பயணிகளிடம் விமானி கோரிக்கை வைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
500 யூரோ ஊக்கத்தொகை
அதேசமயம் விமானத்தில் இருந்து இறங்கும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றும், ஊக்கத்தொகையாக 500 யூரோக்கள் அளிக்கப்படும் என விமான நிறுவனம் தெரிவித்தது.இதையடுத்து பயணிகளில் 19 பேர் விமானத்தில் இருந்து இறங்க சம்மதம் தெரிவித்தனர். அதன்பின், 2 மணி நேர தாமதத்திற்குப் பிறகு விமானம் பத்திரமாக டேக் ஆப் ஆகி புறப்பட்டுச் சென்றது.இதுகுறித்து விமானம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வானிலை நிலைக்கு ஏற்றவாறு விமானத்தின் எடையில் சில வரைமுறைகள் கொண்டு வருவது வழக்கமான நடைமுறைதான். பாதுகாப்பு காரணங்களுக்காக இதே முறையைதான் அனைத்து விமானங்களும் பின்பற்றுகின்றன என தெரிவித்துள்ளது.