Last Updated on: 4th July 2023, 01:11 pm
முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் தனது பயனர்களை கவர்வதற்காக அவ்வப்போது புது புது அப்டேட்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது வீடியோ கால் வசதியில் அசத்தாலன அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் கொண்டு வர உள்ளது.
உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்றாக வாட்ஸ் அப் உள்ளது. வாட்ஸ் அப் இல்லாத ஸ்மார்ட் போனே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து தரப்பு மக்களிடையேயும் வாட்ஸ் அப் பயன்பாடு உள்ளது. துவக்கத்தில் வெறும் குறுஞ்செய்தியை மட்டும் பகிரும் தளமாக அறிமுகம் ஆன வாட்ஸ் அப் பயனர்களை கவரும் விதமாக புது புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அதிலும் மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பை கையகப்படுத்திய பிறகு பல புது அப்டேட்கள் வெளியாகின.
தற்போது உலக அளவில் 2.84 பில்லியன் பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவிலும் வாட்ஸ் அப் பயன்படுத்துவர்கள் எண்ணிக்கை 485 மில்லியனாக உள்ளது. உலக அளவில் வாட்ஸ் அப் பயன்படுத்தும் அதிகம் பேர் இந்தியாவில் தான் உள்ளனர். வாட்ஸ் அப் தனது போட்டியாளர்களை சமாளிக்கவும் பயனர்களை தக்க வைக்கவும் அவ்வப்போது புது புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
இமேஜ்ககள், வீடியோக்கள் அனுப்பும் வசதி, வீடியோக்கள், டெக்ஸ்ட்களை ஸ்டேடஸ் ஆக வைக்கும் வசதி என வாட்ஸ் அப்பில் அவ்வப்போது அசத்தலான அப்டேட்கள் வந்தன. வீடியோ, ஆடியோ கால் வசதியையும் வாட்ஸ் அப் கொண்டு வந்தது. குரூப் வீடியோ கால் வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. முதலில் செல்போனில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட வாட்ஸ் அப்பை கம்ப்யூட்டர் டெஸ்க் டாப்பிலும் பயன்படுத்தும் வசதியை 2015- ஆம் ஆண்டு வாட்ஸ் அப் கொண்டு வந்ததுஅதன்பிறகு அவ்வப்போது டெஸ்க் டாப் யூசர்களை கவரும் விதமாகவும் வாட்ஸ் அப் அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில், தற்போது வீடியோ காலில் வாட்ஸ் அப் சூப்பர் வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இதற்கு முன்பாக டெஸ்க் டாப்பில் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பில் குரூப் வீடியோ கால் அதிகபட்சமாக 8 பேருக்கு மட்டுமே பண்ண முடியும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில், விரைவில் 32 பேர் வரை குரூப் காலில் இணையும் வசதியை விரைவில் வாட்ஸ் அப் கொண்டு வர உள்ளதாம்.
பீட்டா வெர்சன் வாட்ஸ் அப்பில் இந்த வசதி தற்போது வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வாட்ஸ் அப் விரைவில் வெளியிடும் அப்டேட்டில் இந்த வசதி கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது. ஒரே காலில் 32 பேர் வரை இணையும் வசதி மூலம் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது முதல் அலுவலக பயன்பாடு வரை பயனர்களுக்கு பெரிதும் பயன் அளிப்பதாக இருக்கும். இதனால், வாட்ஸ் அப் பயனாளர்கள் மத்தியில் இந்த அப்டேட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.