9.1 C
Munich
Thursday, September 12, 2024

பைபிள், தவ்ராவை எரிக்க அனுமதி.. கடைசியில் முஸ்லிம் இளைஞர் கொடுத்த டுவிஸ்ட் – உலகமே நெகிழ்ந்திருச்சு

Must read

Last Updated on: 18th July 2023, 01:34 pm

ஸ்டாக்ஹோம்: சுவீடனில் பக்ரீத் பண்டிகை அன்று நீதிமன்ற அனுமதியுடன் குர்ஆன் எரிக்கப்பட்டதைபோல் கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிள் மற்றும் யூதர்களின் புனித வேதமான தவ்ராவை எரிக்க அனுமதி பெற்ற முஸ்லிம் இளைஞர் இறுதியில் செய்த காரியம் அனைவரையும் நெகிழ வைத்து உள்ளது.

கடந்த ஜூன் 28 ஆம் தேதி ஐரோப்பிய நாடான சுவீடனில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர். அப்போது மசூதி முன் வந்த நபர் ஒருவர் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை காலில் போட்டு மிதித்து தீயிட்டு எரித்தார். இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றே அவர் இவ்வாறு செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதற்கு பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக அரபு நாடுகள் சுவீடனில் நடைபெற்ற இந்த சம்பவத்துக்கு கடும் கண்டங்களை பதிவு செய்தன.

இந்த நிலையில் சுவீடனில் கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளையும், யூதர்களின் புனித நூலான் ஹீப்ரூ பைபிள் எனப்படும் தவ்ராவையும் ஸ்டாக்ஹோமில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பாக எரிக்க சுவீடனை சேர்ந்த அஹமது அல்லுஷ் என்ற 32 வயது காவல்துறையிடம் அனுமதி கேட்டார். இதற்கு சுவீடன் போலீசும் அனுமதி வழங்கியது.

இந்த தகவல் வெளியாகி சுவீடன் மட்டுமின்றி ஐரோப்பா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிறிஸ்துவ மற்றும் யூத மக்கள் சுவீடன் போலீசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். குறிப்பாக இஸ்ரேல் நாட்டின் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் புனித நூல்களை எரிக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். யூதர்களின் பைபிளை எரிக்க அனுமதியளித்த சுவீடன் அரசை கண்டிப்பதாகவும், யூத மக்களின் புனித நம்பிக்கைகளையும், உணர்வுகளையும் காயப்படுத்தும் வெட்கம்கெட்ட செயல் இது என அவர் சாடி இருந்தார்.அதேபோல் இஸ்ரேலுக்கான சுவீடன் தூதரும், இதை வெறுப்பின் செயல் என்று கண்டித்து இருந்தார். இந்த நிலையில் யூத பைபிள் மற்றும் கிறிஸ்துவ பைபிளுடன் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள இஸ்ரேல் தூதரகத்துக்கு முன்பாக அஹமது அல்லுஷ் என்ற இளைஞர் வருகை தந்தார்.

ஸ்வீடன் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளும், இஸ்ரேலும் கொதித்துப்போய் இருந்த நிலையில் அவரது செயலை காண ஏராளமான ஊடகங்களும், பொதுமக்களும் அங்கு திரண்டு இருந்தனர். அப்போதுதான் அந்த இளைஞர் பெரிய டுவிஸ்ட் ஒன்றை அங்கு திரண்டு இருந்த அனைவருக்கும் வைத்தார்.

ஆம், தான் யூத மற்றும் கிறிஸ்துவ மக்களின் புனித வேதங்களை எரிப்போவதில்லை என அவர் அறிவித்தார். அங்கு திரண்டு இருந்த செய்தியாளர்களிடம் பேசிய அஹமது அல்லுஷ், “எந்த ஒரு புனித நூலையும் எரிக்கக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பினேன்.

அதற்காகவே இவ்வாறு செய்தேன்.நான் ஒரு முஸ்லீம், என்னால் புனித மற்றும் மத வேதங்களை எரிக்க முடியாது. கருத்துச் சுதந்திரத்துக்கும், இனக் குழுக்களை இழிவு படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. குர்ஆன் மற்றும் பிற மத நூல்களை எரிக்கும் செயலை வெறுக்கத்தக்க குற்றமாக கருத வேண்டும்.

இது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கிலேயே யூத, கிறிஸ்துவ வேத நூல்களை எரிக்கும் செயலுக்கு போலீசாரிடம் அனுமதி பெற்றேன். அவற்றை எரிக்கும் நோக்கம் எனக்கு இல்லை.” என்றார். அஹமது அல்லுஷின் இந்த செயலுக்கு உலகளவில் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article