9.1 C
Munich
Thursday, September 12, 2024

பர்கர் கிங் நிறுவனத்தில் 27 ஆண்டுகள் விடுப்பின்றி பணியாற்றிய ஊழியருக்கு பொதுமக்கள் திரட்டிய நிதி…

Must read

Last Updated on: 19th August 2023, 11:19 am

வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், மியாமி டேட் கவுன்டியை தலைமையிடமாகக் கொண்டு பர்கர் கிங் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் சுமார் 20,000 ஓட்டல்கள் உள்ளன. இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 265 ஓட்டல்கள் செயல்படுகின்றன.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள பர்கர் கிங் ஓட்டலில் கெவின் போர்டு (54) என்பவர் பணியாற்றினார். இவர் கடந்த 27 ஆண்டுகளில் ஒருநாள்கூட விடுப்பு எடுக்கவில்லை. இதற்காக பர்கர் கிங் நிறுவனம் சார்பில் அவருக்கு ஒரு பை, சினிமா டிக்கெட், 2 பேனா, 2 கீ செயின், சாக்லேட், கேக், குளிர்பானம் ஆகியவற்றை அன்பளிப்பாக வழங்கியது.

தனது நிறுவனம் அன்பளிப்பாக வழங்கிய பொருட்களை சமூக வலைதளத்தில் கெவின் போர்டு அண்மையில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவியது. கரோனா பெருந்தொற்று காலத்தில்கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய ஊழியருக்கு பர்கர் கிங் நிறுவனம் அற்ப பொருட்களை அன்பளிப்பாக வழங்கியிருப்பது மிகப்பெரிய அநீதி என்று பலர் கருத்து தெரிவித்தனர்.

இந்த சூழலில் கெவின் போர்டின் மகள் செர்னியா தனது தந்தைக்கு நிதியுதவி வழங்கக் கோரி இணையதளம் வாயிலாக வேண்டுகோள் விடுத்தார். யாரும் எதிர்பாராத வகையில் கெவின் போர்டுக்கு பொதுமக்கள் நன்கொடைகளை வாரி வழங்கினர். கடந்த சில மாதங்களில் அவருக்குரூ.3.3 கோடியை பொதுமக்கள் வழங்கி உள்ளனர்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “எனக்கு பொதுமக்கள் மிகப்பெரிய தொகையை நன்கொடையாக அளித்துள்ளனர். இதை என்னால் நம்ப முடியவில்லை. என்னை போன்ற உண்மையான ஊழியருக்கு நிறுவனம் உரிய மதிப்பு அளிக்கவில்லை. ஆனால் அமெரிக்க மக்கள் எனது உழைப்பை பாராட்டி நன்கொடைகளை வாரி வழங்கி வருகின்றனர். அவர்களுக்கு எனது கண்ணீரை காணிக்கையாக செலுத்துகிறேன். இந்த தொகை எனது ஓய்வு வாழ்க்கைக்கு போதுமானது” என்று தெரிவித்தார்.

கெவின் போர்டின் மகள் செர்னியா கூறும்போது, “எனது தந்தைக்கு நான் உட்பட 4 மகள்கள் உள்ளனர். நிதியுதவி கோரி இணையதளம் வாயிலாக வேண்டுகோள் விடுத்தபோது இவ்வளவு பெரிய தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அனைவருக்கும் குடும்பத்தின் சார்பில் நன்றியை உரித்தாக்குகிறேன்” என்றார்.

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article