Last Updated on: 17th July 2023, 05:28 pm
அமெரிக்காவில், வானில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் விமானியின் உடல் நலம் திடீரென பாதிக்க, பெண் பயணி ஒருவர் துணிச்சலாக விமானத்தைத் தரையிறக்கினார்.
திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட விமானி
சனிக்கிழமையன்று, ஆறு பேர் பயணிக்கும் விமானம் ஒன்று நியூயார்க்கிலிருந்து புறப்பட்ட நிலையில், விமானிக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.
Connecticutஐச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்துள்ளார். விமானியின் உடல் நலம் திடீரென பாதிக்கவே, துணிச்சலாக அந்த பெண் பயணி விமானத்தை Massachusetts மாகாணத்தில் தரையிறக்கியுள்ளார்.
விமானம் இயக்குவதில் எந்த அனுபவமும் இல்லாத அந்த பெண் விமானத்தை தரையிறக்கும்போது, அதன் இறக்கைகளில் ஒன்று தரையில் மோதி இரண்டாக உடைந்துள்ளது. என்றாலும், அவரது துணிச்சலும் சமயோகிதமும் விமானத்தில் பயணித்த பயணிகளுடைய உயிரைக் காப்பாற்றியுள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் விமானி
சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த அவசர மருத்துவ உதவிக்குழுவினர், 79 வயதுடைய அந்த விமானியை ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அந்த பெண்ணோ எந்த பாதிப்புமின்றி விமானத்திலிருந்து வெளியே வந்தாலும், மருத்துவப் பரிசோதனையிலும் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்ததையடுத்து, அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.