Last Updated on: 25th May 2023, 09:59 am
பிரித்தானியாவில் திடீரென்று சுருண்டு விழுந்து மரணமடைந்த 11 வயது மாணவிக்கு, அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
திடீரென்று மயக்கமடைந்தவர்
பிரித்தானியாவின் ரோச்டேல் பகுதியை சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவி ஃபலாக் பாபர் என்பவரே பரிதாபமாக மரணமடைந்தவர். கடந்த ஆண்டு மார்ச் மாதம், குளியலறையில் திடீரென்று மயக்கமடைந்தவர், சுருண்டு விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் உடற்கூறு ஆய்வு முன்னெடுத்த Catherine McKenna என்பவர், நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். கொஞ்ச காலமே தங்களுடன் வாழ்ந்தாலும், ஃப்லாக் எங்களுக்கு அருமையான பல நினைவுகளையும் அன்பையும் விட்டுச் சென்றுள்ளார் என அவரது தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
நாங்கள் அனைவரும் அவளை இதயத்தில் இருந்து நேசித்தோம், அவள் எப்போதும் எங்கள் இதயங்களிலும் எண்ணங்களிலும் என்றென்றும் இருப்பாள் எனவும் தாயார் ஷாஸியா தெரிவித்துள்ளார்.
மூளையில் ஏற்பட்ட காயம்:
சம்பவத்தின் போது சிறுமி ஃபலாக் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், ராயல் மான்செஸ்டர் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மருத்துவமனையில் அவர் தொடர்ந்து சில முறை வாந்தியெடுக்கவும் பின்னர் நினவு திரும்பாத நிலையில் காணப்பட்டார் என தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து, அவசர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி, பின்னர் மரணமடைந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான பரிசோதனையில் மூளையில் ஏற்பட்ட காயமே அவர் மரணத்திற்கு காரணமாக அமைந்தது என கண்டறியப்பட்டுள்ளது.