Last Updated on: 24th May 2023, 08:44 am
சூடானில் உள்நாட்டு போருக்கு மத்தியில் செல்போன் வெளிச்சத்தில் பெண் ஒருவருக்கு மகப்பேறு அறுவை சிகிச்சை நடந்து இருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சூடான் உள்நாட்டுப் போர்:
இந்த ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி சூடானில் ராணுவ படைகளுக்கும் (SAF) துணை ராணுவப் படைக்கும் (RSF) இடையே தலைநகர் கார்டூமில் உள்நாட்டு போர் மூண்டது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில், நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.அத்துடன் பல்வேறு பொது சேவை மையங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் தொடர்ந்து அடைக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
அதே நேரத்தில் உள்நாட்டு போர் தொடங்கிய சில மணி நேரங்களில் பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா போன்ற முன்னணி நாடுகள் சிறப்பு விமானங்கள் மூலம் அவர்களது குடிமக்களை பத்திரமாக வெளியேற்றியுள்ளனர்.
செல்போன் வெளிச்சத்தில் மகப்பேறு சிகிச்சை:
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் சூடானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பெண் ஒருவருக்கு செல்போன் வெளிச்சத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சை ஒன்று நடந்துள்ளது.
இது தொடர்பாக அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர் பேசிய வீடியோ ஒன்றில், இன்று மே 3 திகதி நாங்கள் ஆல்பன் ஜாகித் மருத்துவமனையில் உள்ளோம், இங்கு மின்சாரம் தடைபட்டுள்ளது, ஜெனரேட்டர்களிலும் எரிவாயுக்கள் இல்லை, எனவே நாங்கள் செல்போன் வெளிச்சத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.அத்துடன் கார்ட்டூம் மருத்துவமனைகளில் தண்ணீர் கூட இல்லாத அவலநிலை உள்ளது, போருக்கு பயந்து பல மருத்துவர்கள் அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதனால் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்ய கூட மிகவும் சிரமமான நிலை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.இதற்கிடையில் செல்போன் வெளிச்சத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாயும் குழந்தையும் நல்ல உடல் நிலையுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.