வளைகுடா நாடுகளுக்கு சென்று கை நிறைய சம்பளம் வாங்கி கொண்டு வந்து சொந்த ஊரில் செட்டில் ஆகிவிடலாம் என்ற கனவுடன் இருப்பவர்கள் ஏராளம். இதில் இந்தியர்களும் விதிவிலக்கல்ல. ஏனெனில் சவுதி அரேபியா, துபாய், கத்தார், குவைத் போன்ற நாடுகள் இந்தியாவில் இருந்து எளிதில் பயணிக்கக் கூடிய வகையில் இருக்கின்றன. பண்டைய காலந்தொட்டே வணிகமும், தொழில் வாய்ப்புகளும் ஏராளமாக இருந்துள்ளன.
அதன் தொடர்ச்சி தற்போதும் நீடித்து வருகிறது. இந்தியர்கள் மட்டுமின்றி ஆசியா, ஐரோப்பாவை சேர்ந்த பல்வேறு நாட்டு மக்கள் குவைத் நாட்டில் வேலை செய்து வருகின்றனர். இவர்களை நிர்வகிக்கும் வகையில் வெளிநாட்டவர்களுக்கு பிரத்யேக வழிகாட்டுதல்கள் அமலில் இருக்கின்றன. சமீபத்தில் கூட வெளிநாட்டு மக்கள் தாங்கள் நிலுவை வைத்துள்ள வரிகள் அனைத்தையும் முழுமையாக செலுத்தினால் மட்டும் வெளிநாட்டிற்கு பயணிக்கலாம் என்று அதிரடி உத்தரவு போட்டது.
வெளிநாட்டு ஊழியர்கள் நீக்கம்
அதில் போக்குவரத்து அபராதமும் அடங்கும். இந்நிலையில் 800 வெளிநாட்டு ஊழியர்களை வேலையை விட்டு தூக்கி குவைத் உள்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்கள் தங்கள் வேலைக்கான ஒப்பந்தத்தை அடுத்த ஒரு மாதத்திற்குள் இறுதி செய்து கொள்ள வேண்டும் என்று காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் பணி நீக்கம் உறுதி செய்யப்பட்டு வெளியேற வேண்டியது தான்.
என்ன காரணம்
இவ்வளவு பேரை ஒரே சமயத்தில் எதற்காக வேலையில் இருந்து நீக்கினார்கள்? என்று தெரியவில்லை. அதாவது, சரியான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக அரசியல் பார்வையாளர்கள் சில விஷயங்களை முன்வைக்கின்றனர். இத்தகைய நடவடிக்கைக்கு ”குவைத்மயமாக்கும் செயல்திட்டம்” தான் காரணமாம். அப்படியெனில் உள்நாட்டு மக்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்குவது.
உள்நாட்டு மக்களுக்கு முக்கியத்துவம்
வெளிநாட்டவர்களுக்கு முக்கியத்துவத்தை குறைப்பது. அதற்காக ஒரே அடியாக யாருமே வேலைக்கு வேண்டாம் என்று சொல்லிவிட மாட்டார்கள். படிப்படியாக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். உள்நாட்டு மக்கள் பிரதிநிதித்துவம் பெறும் வகையில் அனைத்து துறைகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்பு, எஞ்சிய இடங்களில் வெளிநாட்டு மக்கள் பணியில் தொடரலாம்.
ஆசிரியர்கள் பணி நீக்கம்சமீபத்தில் கூட 1,800 வெளிநாட்டு ஆசிரியர்களை வேலையில் இருந்து தூக்கி குவைத் கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அந்நாட்டில் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்ச்சியாக நிலவி வரும் சூழலில் அடாவடியாக பணி நீக்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இத்தகைய நடவடிக்கைகளால் குவைத் நாட்டில் வேலை செய்து வரும் வெளிநாட்டினர் மிகுந்த கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.