9.1 C
Munich
Thursday, September 12, 2024

கிரீஸ் அருகே கப்பல் கவிழ்ந்ததில் உயிரிழப்பு 79 ஆக உயர்வு

Must read

Last Updated on: 16th June 2023, 12:14 pm

கலாமதா (கிரீஸ்): லிபியாவில் இருந்து இத்தாலிக்கு நூற்றுக்கணக்கான அகதிகளுடன் சென்ற மீன்பிடி கப்பல் கிரீஸ் அருகே நடுக்கடலில் பழுதாகி கவிழந்தது. இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது.

நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. 104 பேரை் கிரீஸ் நாட்டின் கடற்படை, கடலோர காவல்படை மீட்டன.லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு கடாபி ஆட்சி கவிழ்ந்ததில் இருந்தே, அங்கு குழப்பமான சூழல் நிலவுகிறது. அங்கிருக்கும் மக்கள் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைவது தொடர்கிறது.

இவர்களை படகுகளில் சட்டவிரோதமாக அழைத்துச் செல்வதை ஒரு கும்பல் தொழிலாக செய்து வருகிறது. இந்நிலையில் கிரீஸ் அருகே ஒரு மீன்பிடி கப்பல் நடுக்கடலில் நேற்று முன்தினம் பழுதாகி நின்றது.

அதில் சுமார் 500 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது. இந்த கப்பல் லிபியாவில் இருந்து புறப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. மீன்பிடி கப்பல் பழுதானதும், அதன் கேப்டன் ஒரு சிறிய படகில் தப்பிச் சென்று விட்டார்.

நடுக்கடலில் மீன்பிடி கப்பலில் தத்தளித்த அகதிகளுக்கு, சரக்கு கப்பல் ஒன்று உணவு மற்றும் தண்ணீர் வழங்கியுள்ளது. பின்பு அவர்களுக்கு உதவ கிரீஸ் நாட்டின் கடலோர காவல் படையின் சென்றுள்ளனர்.

ஆனால் அவர்களின் உதவியை மறுத்த அகதிகள், தாங்கள் இத்தாலிக்கு பயணத்தை தொடர உதவும்படி கேட்டுள்ளனர். மீன்பிடி கப்பல் பழுதான ஒரு மணி நேரத்தில், அந்த கப்பல் தள்ளாட தொடங்கியது. மீன்பிடி கப்பலில் இருந்த நூற்றுக்கணக்கானோர் ஒரு பக்கமாக நகர்ந்ததால், கப்பல் தள்ளாடி நடுக்கடலில் கவிழ்ந்தது. அடுத்த 10 முதல் 15 நிமிடங்களில் அந்த கப்பல் மூழ்கியது.

அதில் இருந்த அகதிகள் கப்பலில் இருந்து வெளியேறிய பொருட்களை பற்றிக்கொண்டு கடலில் மிதந்து கொண்டிருந்தனர். கிரீஸ் நாட்டின் கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் 104 பேரை மீட்டு கலாமதா துறைமுக நகருக்கு கொண்டு சென்றனர்.

இவர்களில் 30 பேர் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள், 10 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள், 35 பேர் சிரியாவைச் சேர்ந்தவர்கள், 2 பேர் பாலஸ்தீனர்கள் மீட்கப்பட்டவர்கள் அனைவரும் ஆண்கள். 25 பேர் காய்ச்சலுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் 16 வயது முதல் 49 வயதுடையவர்கள். கிரீஸ் நாட்டின் கடலோர காவல் படையினர் இதுவரை 79 உடல்களை கடலில் இருந்து மீட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 79 அகதிகள் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. மீன்பிடி கப்பல் கவிழ்ந்த இடம் கிரீஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் இருந்து 75 கி.மீ தூரத்தில் சர்வதேச கடல் பகுதியில் உள்ளது.

இங்கு 17,000 அடி ஆழம் உள்ளது. அதனால் இங்கு மூழ்கிய கப்பலை கண்டுபிடிப்பது சிரமம் என கூறப்படுகிறது. மத்திய தரைக்கடல் பகுதியில் வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இத்தாலி செல்லும் கடல்வழி உலகிலேயே மிகவும் மோசமானது என ஐ.நா அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article