மைசூர் மன்னராக இருந்த திப்பு சுல்தான் பல போர்களில் பயன்படுத்திய வாள் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. அவருக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக இந்த வாளை திப்பு பாதுகாத்திருந்தார்.கடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட மன்னர் திப்பு சுல்தான். 1782 ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகள் அவர் மன்னராக ஆட்சி புரிந்தார். மைசூர் சிங்கம் என்று அழைக்கப்பட்ட திப்புசுல்தான் ஏவுகனை தொழில்நுட்பத்தின் முன்னோடி என்று அழைக்கப்படுகிறார்.
இப்போதிருக்கும் ஏவுகணை தாக்குதலை திப்புசுல்தான் 18 ஆம் நூற்றாண்டிலேயே போர்களில் பயன்படுத்தியுள்ளார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மிக கடுமையாக போராடினார். அதோடு மராட்டியர்களோடும் பல போர்கள் புரிந்துள்ளார். இந்தப் போர்களில் எல்லாம் இவருக்கும் பெரும் வெற்றியை தேடித்தந்த வாள் அவருக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. ஜெர்மன் பிளேடு வகையைச் சேர்ந்த அந்த வாள் திப்புசுல்தானின் மறைவிற்கு பிறகு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் டேவிட் பேர்ட் என்பவருக்கு அவரது வீரத்தை பாராட்டி பரிசாக வழங்கப்பட்டது.
அந்த வாள் இப்போது லண்டனில் இருக்கிறது. அந்த வாளை லண்டனைச் சேர்ந்த போன்ஹாம்ஸ் என்ற ஏல நிறுவனம் கடந்த செவ்வாய் கிழமையன்று ஏலம் விட்டது. ஏலத்தில் தொலைபேசி வாயிலாக கலந்து கொண்ட நபர் அந்த வாளை 140 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். ஏலம் எடுத்தவர் யார் என்ற விபரத்தை வெளியிட மறுத்த ஏல நிறுவனம் தாங்கள் நிர்ணயித்ததை விட ஏழு மடங்கு அதிக தொகை்கு இந்த வாள் ஏலம் போய் உள்ளதாக கூறியுள்ளது.