Last Updated on: 7th August 2023, 11:30 am
டெல்லி: உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்கும் இந்தியர்கள் சென்று பணியாற்றி வரும் நிலையில், இந்தியர்கள் எந்தெந்த நாடுகளில் சிறையில் உள்ளனர் என்பது குறித்த தகவல்களை மத்திய அரசு பகிர்ந்துள்ளது.
இந்தியர்கள் இப்போது உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்கும் சென்று வேலை செய்து வருகிறார்கள். குறிப்பாக, இந்தியர்கள் அதிகம் ஐக்கிய அமீரகம், அமெரிக்கா போன்ற நாடுகளில் தான் அதிகம் வேலைக்குச் செல்கிறார்கள்.
வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் சில காரணங்களால் கைது செய்யப்படும் நிகழ்வுகளும் நடக்கவே செய்கிறது. சில சமயம் தவறான தகவல்களை அடிப்படையாக வைத்தும் கூட இந்தியர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களை வெளியே கொண்டு வர மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்தே வருகிறது.
சிறையில் உள்ள இந்தியர்கள்: இதற்கிடையே இந்தியா குடிமக்கள் எத்தனை பேர் எந்தெந்த நாடுகளில் உள்ளனர் என்பது குறித்த தகவல்களை மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அளித்திருந்தது. ராஜ்யசபாவில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர்கள் எழுத்துப்பூர்வமான பதிலை அளித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக உலகின் பல்வேறு நாடுகளில் 8,330 இந்தியர்கள் சிறையில் இருக்கிறார்களாம். ஐக்கிய அமீரகத்தில் தான் அதிகபட்ச சிறை கைதிகள் உள்ளனர்.
இது குறித்து விரிவான பதிலை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் அளித்துள்ளார். ஐக்கிய அமீரகத்தில் மட்டும் 1,611 இந்தியர்கள் சிறையில் உள்ளனர். குறிப்பாகச் சவுதி அரேபியாவில் 1,461 இந்தியர்கள் சிறைகளில் உள்ளனர், அதைத் தொடர்ந்து நேபாளத்தில் 1,222 பேர் சிறையில் இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து கத்தாரில் 696 இந்தியர்களும் குவைத்தில் 446 இந்தியர்களும் சிறையில் இருக்கிறார்கள்.
அமெரிக்கா, சீனா: அதைத் தொடர்ந்து மலேசியாவில் 341 இந்தியர்கள் சிறையில் இருக்கும் நிலையில், பாகிஸ்தானில் 308 இந்தியர்களும் அமெரிக்காவில் 294 இந்தியர்களும் சிறையில் உள்ளனர். அதைத் தொடர்ந்து பஹ்ரைன் மற்றும் பிரிட்டனில் முறையே 277 மற்றும் 249 இந்தியர்கள் சிறையில் உள்ளனர்.
நமது அண்டை நாடான சீனாவில் 178 இந்தியர்கள் சிறையில் இருக்கிறார்கள். அதேபோல இத்தாலியில் 157 இந்தியர்களும், ஓமனில் 139 இந்தியர்களும் சிறைகளில் வாடுவதாக ராஜ்யசபாவில் அமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக உலகெங்கும் 90 நாடுகளில் இந்தியர்கள் சிறையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
நடவடிக்கை: வெளிநாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்களை விடுவிப்பது மற்றும் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவது குறித்துச் சம்பந்தப்பட்ட உள்ளூர் நிர்வாகத்துடன் இந்தியத் தூதரகங்கள் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தனது எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “உலகின் பல நாடுகளிலும் இருக்கும் தனியுரிமைச் சட்டங்கள் காரணமாக, சம்பந்தப்பட்ட நபர் சம்மதிக்கும் வரை நமக்கு யார் எந்த சிறையில் இருக்கிறார் என்ற தகவல்கள் கிடைப்பதில்லை.. இருப்பினும், இந்தியர் கைது செய்யப்பட்ட உடன் அது குறித்த தகவல் அங்குள்ள இந்திய தூதரகத்திற்குத் தெரிவிக்கப்படும்.
மத்திய அரசு: அந்த தகவல் கிடைத்தவுடன் அங்குள்ள வெளியுறவு அலுவலகம் சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு வழக்கின் உண்மைகளைக் கண்டறிய முயலும்.. அவர்களின் குடியுரிமையை உறுதிசெய்யப்பட்ட பிறகு.. அங்குள்ள இந்தியருக்கு சட்டப்பூர்வமாக அனைத்து உதவிகளும் செய்யப்படும்” என்று அந்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறப்பட்டுள்ளது.
இந்தியர்கள் உலகெங்கும் பல நாடுகளுக்கு வேலைக்குச் சென்றாலும், சட்டம் மிகக் கடுமையாக இருக்கும் அமீரக நாடுகளிலேயே அவர்கள் அதிகம் சிறையில் இருப்பது மத்திய அரசின் தகவல்களில் தெரிய வந்துள்ளது.