Last Updated on: 7th July 2023, 12:17 pm
ஜெனீவா: இன்ஸ்டிடியூட் ஃபார் எகனாமிக்ஸ் அண்ட் பீஸ் என்ற அமைப்பு உலகின் அமைதியான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
குளோபல் அமைதி குறியீடு எனப்படும் உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வெளியிடப்படுகிறது. இன்ஸ்டிடியூட் ஃபார் எகனாமிக்ஸ் அண்ட் பீஸ் என்ற அமைப்பு இதை வெளியிட்டு வருகிறது.
இந்தாண்டிற்கான அமைதியான நாடுகள் பட்டியல் சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. 17ஆவது ஆண்டாக வெளியிடப்படும் இந்தப் பட்டியலில் இந்தாண்டு மொத்தம் 163 நாடுகள் இடம் பிடித்துள்ளன.
உலக நாடுகள்: அமைதியான சூழல், பொருளாதாரம், அமைதி, வளர்ச்சி என்று பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்டு அவர்கள் இந்தப் பட்டியலை உருவாக்கியுள்ளனர். இந்த 163 நாடுகளைக் கொண்ட பட்டியலில் தான் உலக மக்கள்தொகையில் 99.7 சதவீத மக்கள் வசிக்கிறார்கள். மொத்தம் 23 வகையான காரணிகளைக் கருத்தில் கொண்டு அவர்கள் இந்தப் பட்டியலை உருவாக்கியுள்ளனர்….
சமூகப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு, உள்நாட்டு மற்றும் சர்வதேச மோதல்கள், ராணுவ மயமாக்கல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியலை அவர்கள் உருவாக்கியுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு உலக சராசரி அமைதி 0.42 சதவீதம் வரை மோசமடைந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் சர்வதேச அமைதி குறியீடு 3ஆவது முறையாகக் குறைந்துள்ளது.
முதலிடம் யாருக்கு: 2022ஆண்டுடன் ஒப்பிடுகையில் 84 நாடுகளில் நிலைமை மேம்பட்டுள்ளது. அதேநேரம் 79 நாடுகளில் அமைதி மோசமாகியுள்ளது. இந்தப் பட்டியலில் உலகின் அமைதியான நாடாக ஐஸ்லாந்து இருக்கிறது. கடந்த 2008ஆம் ஆம்டு முதல் இந்தப் பட்டியலில் ஐஸ்லாந்து தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து டென்மார்க், அயர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரியா நாடுகள் டாப் இடங்களில் இருக்கிறது.
இந்த அமைதியா நாடுகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து 8 ஆண்டுகளாகக் கடைசி இடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து ஏமன், சிரியா, தெற்கு சூடான், காங்கோ ஆகிய நாடுகள் அமைதியற்ற நாடுகளாக இருப்பதாக குளோபல் அமைதி குறியீடு தெரிவித்துள்ளது.
இந்தியா எங்கே: இந்தப் பட்டியலில் இந்தியா இப்போது 126ஆவது இடத்தில் இருக்கிறது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா 2 இடங்கள் முன்னேறி இருக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் அமைதியான சூழல் 3.5% அதிகரித்துள்ளது. வன்முறை குற்றங்கள், அண்டை நாடுகள் உடனான உறவுகள், அரசியல் நிலை ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாகவே இந்தியா இந்த ரேங்கில் முன்னேறி இருக்கிறது.
பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற எல்லை நாடுகளுடன் எல்லை தாண்டிய வன்முறை மற்றும் போர்நிறுத்த மீறல்கள் குறைந்துள்ளதே இந்தியாவில் அமைதியான சூழல் அதிகரிக்கக் காரணமாக இருப்பதாக குளோபல் அமைதி குறியீடு தெரிவித்துள்ளது. குறிப்பாகச் சீனாவுடன் எல்லையில் இருந்த பதற்றம் வெகுவாக குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
உலக நாடுகள்: இந்தப் பட்டியலில் அமெரிக்கா 131ஆவது இடத்தில் இருக்கிறது. இதில் நேபாளம் 79ஆவது இடத்திலும் நேபாளம் 80ஆவது இடத்திலும் இருக்கிறது. அதேபோல இதில் இலங்கை 107ஆவது இடத்தில் இருக்கும் நிலையில், பாகிஸ்தான் 146ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்த அமைதியான நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தில் இருக்கும் நிலையில், டென்மார்க் இரண்டாவது இடத்திலும் அயர்லாந்து 3ஆவது இடத்திலும் இருக்கிறது. நியூசிலாந்து, ஆஸ்திரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முறையே 4, 5, 6ஆவது இடங்களில் இருக்கிறது. இத்துடன் போர்ச்சுகல், ஸ்லோவேனியா, ஜப்பான், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் டாப் 10 நாடுகளில் இடம் பிடித்துள்ளது.
கடந்த 15 ஆண்டுக் கால டேட்டாவை எடுத்து பார்க்கும் போது, உலகம் அமைதியற்றதாக மாறி வருவதாக அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் சர்வதேச நாடுகளின் அமைதி 5% வரை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.