Last Updated on: 30th July 2023, 12:42 pm
நியூயார்க்: சாதாரண பூச்சி தானே என நாம் நினைக்கும் உண்ணி கடித்து, ஒருவர் கை, கால்களை இழந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் எனக் கூறினால் நம்ப முடிகிறதா..? ஆம். அமெரிக்காவில் ஒரு இளைஞருக்கு தான் இந்த கதி ஏற்பட்டிருக்கிறது. என்ன நடந்தது?
பல விஷயங்களில் முன்னோர்களும், பெரியவர்களும் கூறுவதை நாம் எள்ளி நகையாடியிருப்போம். “இதெல்லாம் மூட நம்பிக்கை. இந்த காலத்தில் இதை யாராவது நம்புவார்களா” என கூட நாம் கேட்டிருப்போம். ஆனால் பெரியவர்கள் கூறியதற்கு பின்னால் பெரிய காரணம் இருக்கிறது என பின்னாளில் நாம் உணர்ந்திருப்போம். வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது என முன்னோர்கள் கூறியது, ஒரு காலத்தில் கிண்டல் செய்யப்பட்டது. ஆனால், வடக்கே புவி காந்தத்தின் விசை அதிகமாக இருப்பதால் அந்த திசையில் தலை வைத்தால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என அறிவியல் விஞ்ஞானிகள் இன்று கூறுகின்றனர்.
இப்படி பல உதாரணங்களை கூறிக்கொண்டே போகலாம். அந்த வகையில், “உண்ணி கடிக்கு நகம் பகை” என கிராமத்தில் கூறப்படுவது உண்டு அது எந்த அளவுக்கு உண்மை என்பதை அமெரிக்காவில் நடந்த சம்பவம் நமக்கு உணர்த்தி இருக்கிறது.
உண்ணி வேடத்தில் வந்த எமன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் மைக்கெல் கோல்ஹாஃப். 35 வயதாகும் இவர் அடிக்கடி தனது தோழியின் வீட்டிற்கு செல்வது வழக்கம். அப்போது அங்குள்ள நாயுடன் கட்டிப்பிடித்து விளையாடுவது மைக்கெல்லின் வழக்கம் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில், கடந்த மாதம் மைக்கெல் அந்த நாயுடன் விளையாடியுள்ளார். அப்போது அந்த நாயின் மீது இருந்த உண்ணி (Flea) ஒன்று மைக்கெல்லின் காலில் ஏறியுள்ளது. இதை மைக்கெல் கவனிக்கவில்லை. பின்னர் அந்த உண்ணி, மைக்கெல்லின் உடலில் பல இடங்களில் கடித்துள்ளது.
சொறிந்ததால் வந்த வினை: அவரும் ஏதோ பூச்சிதான் நம்மை கடித்துள்ளது என எண்ணி அந்த இடங்களில் நன்றாக சொறிந்துள்ளார். இதனிடையே, அவர் சொறிந்த இடங்களில் தோல் தடித்து ஒருவித திரவம் வந்துள்ளது. அதையும் மைக்கெல் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், மைக்கெல்லுக்கு 2 வாரங்களுக்கு முன்பு பயங்கர காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதேபோல, கை, கால்களையும் அசைக்க முடியாமலும் போயுள்ளது. இதையடுத்து, அவரது நண்பர்களை அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போதுதான், அவரது உடலில் பல இடங்களில் உண்ணி கடித்திருப்பதையும், அதுதான் அவரது இந்த நிலைமைக்கு காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கை – கால்கள் அகற்றம்: இந்த சூழலில், பல சிகிச்சைகள் அளித்த போதிலம் அவரது உடல்நிலை தேறவில்லை. அதே சமயத்தில், அவரது கை, கால்களில் உள்ள ரத்த நாளங்களிலும் அடைப்பு ஏற்பட்டு அவையும் ஊதா நிறத்தில் மாறின. இதையடுத்து, அவரது இரண்டு கைகளையும், கால் பாதங்களையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். மேலும், அவரது சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு டயாலிசீஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரை காப்பாற்றுவது கடினம் தான் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மருத்துவர்கள் சொல்வது என்ன? இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “உலகம் முழுவதும் 2500 வகையான உண்ணிகள் இருக்கின்றன. இவை அனைத்தும் மனிதர்களுக்கு ஆபத்தானவை அல்ல. ஆனால், பாக்டீரியாக்களால் தாக்கப்பட்ட உண்ணிகள் நம்மை கடிக்கும் போதே அது ஆபத்தானதாக மாறுகின்றன. உண்ணி கடித்ததும் சொறிந்து விட்டால் அந்த புண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் மற்ற இடங்களுக்கும் பரவிவிடும். இந்த பாக்டீரியாக்கள் தோலை துளைத்து ரத்தத்தில் கலந்து ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும். எனவே ஏதோ ஒரு பூச்சி கடித்து, அது ஒரு வாரமாக ஆறாவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்” என்றனர்.