9.1 C
Munich
Thursday, September 12, 2024

இயற்கை எழில் கொஞ்சும் ஓமானின் சலாலாவில் நிச்சயம் பார்க்க வேண்டிய 17 இடங்கள்.. லைஃப்ல மிஸ் பண்ண கூடாத ஒரு இடம்…வாங்க பார்க்கலாம் புகைபடங்களுடன்…

Must read

Last Updated on: 11th July 2023, 09:44 am

வெளிநாடுகளில் இருந்தோ அல்லது மற்ற வளைகுடா நாடுகளில் இருந்தோ ஓமானிற்கு வரும் சுற்றுலாவாசிகளுக்கு ஓமானில் உள்ள சலாலா நகரம் (salala) மிகச் சிறந்த இடமாகும். ஓமானின் “Green Jewel” என்றழைக்கப்படும் சலாலாவானது முழுக்க முழுக்க இயற்கை எழில் மிகுந்த இடமாகும்.

இங்குள்ள உயரமான கம்பீரமான தோஃபர் மலைகளின் மீது செல்லும் மேகங்கள் பள்ளத்தாக்குகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் சாரல் மற்றும் மூடுபனியைக் கொண்டு வரும். எனவே, கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க விரும்புபவர்களும் இந்த இலக்கைத் தேர்வு செய்யலாம்.

இயற்கையின் பொக்கிஷமாகத் திகழும் இந்த சலாலாவில், பசுமையான இயற்கைக் காட்சிகள், கண்ணுக்கினிய சோலைகள், நன்னீர் ஏரிகள் மற்றும் மறைக்கப்பட்ட குகைகள் என சுற்றுலாப் பயணிகளை பிரம்மிக்க வைக்க ஏராளமான இடங்களும் காட்சிகளும் உள்ளன.

எனவே, இத்தகைய பசுமையான வளைகுடா நாடுகளின் சொர்க்கமாக இருக்கும் சலாலாவிற்கு வரும் போது, நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களின் பட்டியலை இங்கே சிறப்பு தொகுப்பாக கொடுத்துள்ளோம். இங்கிருந்தே சலாலாவிற்கு ஒரு சுற்றுலா செல்லலாம் வாங்க.

1. தர்பத் பள்ளத்தாக்கு:

அமைதியான அனுபவத்தை தரக்கூடிய இயற்கை எழில் கொஞ்சும் அழகிய சோலையான தர்பத் பள்ளத்தாக்கில், பாறைகளில் இருந்து விழும் அற்புதமான நீர்வீழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். மேலும், பார்வையாளர்களை உற்சாகமூட்டும் நன்னீர் ஏரியில் படகு சவாரி, சுற்றியுள்ள மலைகளின் இயற்கைக் காட்சிகள் மற்றும் வனவிலங்குகள் என ஏராளமான அனுபவங்கள் இங்கு பார்வையாளர்களுக்கு உள்ளன.

2. ஜபல் சம்ஹான்:

சாகச ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமென்றால் அது சலாலாவில் உள்ள ஜபல் சம்ஹான் தான். ஏனெனில், மிக உயர்ந்த சிகரமாக கம்பீரமாகக் காட்சியளிக்கும் ஜபெல் சம்ஹான், வளைந்து செல்லும் பாதைகள் அற்புதமான காட்சிகள் என ஒரு உற்சாகமான மலையேற்ற அனுபவத்தை வழங்கும்.

மேலும், கடினமான சாகச மலையேற்றத்திற்கு பிறகு, நகரத்தின் பரந்த காட்சிகள்,  பள்ளத்தாக்குகள் மற்றும் தொலைவில் உள்ள நீலநிற அரபிக் கடல் ஆகியவற்றின் அழகு பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

3. சலாலா ஃப்ரூட் மார்க்கெட்:

இந்த ஃப்ரூட் மார்க்கெட், வண்ணமயமான பழங்களின் சுவையை அனுபவிக்க சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது. இங்கு ருசியான மாம்பழங்கள், வாழைப்பழங்கள் மற்றும் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் பழங்கள் போன்ற வெவ்வேறு பழங்கள் கொத்துக்கொத்தாக தொங்கவிடப்பட்டிருக்கும்.

4. ஆண்ட்டி கிராவிட்டி பாயிண்ட்:

சலாலாவில் இருக்கக்கூடிய பகுதியில் ஒரு ஆப்டிக்கல் இல்லுஷன் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அதாவது இயற்பியல் விதிகளுக்கு மாறாக, கார்கள் மேல்நோக்கி இந்த இடத்தில் நகரும், ​​புவியீர்ப்பு விசையை மீறுவது போல் தோன்றும் இந்த அனுபவத்திற்கு பிரபலாமானது இந்த இடமாகும். இத்தகைய தனித்துவமான நிகழ்வு பல ஆண்டுகளாக பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

5. டால்பின் வாட்ச் க்ரூஸ்:

கடலின் மேற்பரப்பில் வரிசையாக அணிவகுத்து அங்குமிங்கும் தாவிக் கொண்டிருக்கும் டால்பின்களின் துள்ளல்களைக் காட்டும் படகு பயணத்தை பார்வையாளர்கள் இங்கு அனுபவிக்கலாம். படகுடன் சேர்ந்து நீந்தும் ​​டால்பின்களின் அக்ரோபாட்டிக் காட்சிகளில் மனசு சொக்கிப் போகும் என்பதில் சந்தேகமில்லை.

6. மிர்பத் கோட்டை (Mirbat Castle):

வரலாற்றை பிரதிபலிக்கும் மிர்பத் கோட்டை சலாலாவில் முக்கிய அடையாளமாக உள்ளது. கம்பீரமாகக் காட்சியளிக்கும் இந்த கோட்டையில் பாரம்பரிய ஓமானி கட்டிடக்கலையின் நுட்பம் மற்றும் பிராந்தியத்தின் வளமான பாரம்பரியத்தை பார்க்கலாம்.

7. அய்ன் அதூம் நீர்வீழ்ச்சிகள்:

உச்சியில் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் அய்ன் அதூம் நீர்வீழ்ச்சிகள் அதூம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளன. அருவி நீர் தெளிவான குளத்தில் விழுந்து, ஒரு அற்புதமான சூழலை உருவாக்குவதால், பார்வையாளர்கள் நீராடி இளைப்பாற சிறந்த இடமாக இது விளங்குகிறது.

8. அய்ன் தபாரக்:

பார்வையாளர்களுக்கு அமைதியான அனுபவத்தை வழங்கக்கூடிய மற்றொரு இடமாக அய்ன் தபாரக் உள்ளது. கரடுமுரடான மலையின் உச்சியில் இருந்து கொட்டும் அதன் டர்க்கைஸ் நீர் மனதிற்கு இலகுவான உணர்வைத் தரும் மற்றும் இயற்கையோடு மீண்டும் இணைவதற்கு ஏற்ற இடமாகும்.

9. முக்சைல் பீச் மற்றும் ஊதுகுழிகள் (Blowholes):

தங்க நிற மணற்பரப்புடன் நீலவண்ண கடல் சேர்ந்திருக்கும் முக்சைல் கடற்கரையின் அழகியலும், கடற்கரையை ஒட்டிய பாறைகளின் இயற்கையான ஊதுகுழிகளும் இதன் சிறப்பம்சமாகும்.

10. ஷாட் வியூபாய்ன்ட் (Shaat viewpoint):

காண்போரை பிரம்மிப்பில் ஆழ்த்தும் இந்த பரந்த காட்சியை மலையின் உச்சியில் இருந்து பார்க்கலாம். இங்கிருந்து பார்க்கும் போது, தங்க நிற மணலும் நீல நிற கடலும் சந்திக்கும் சலாலாவின் கடற்கரையின் பரந்த காட்சிகள் தெளிவாகத் தெரியும். அதேசமயம், மென்மையான காற்று கடலின் வாசனையுடன் வருடிவிட்டுச் செல்லும்.

11. தாவி அட்டைர் சிங்க்ஹோல் (Tawi Attair Sinkhole):

சலாலாவில் இருக்கக்கூடிய அழகிய நிலத்தடி குகையாகும். அங்குள்ள செங்குத்தான பாறைகளை செழுமையான தாவரங்கள் காண்போர் கண்களுக்கு விருந்தளிக்கும்.

12. தல்குத்:

மலைகளின் ஓரத்தில் அமைந்துள்ள தல்குத் என்ற வினோதமான கிராமத்தில் பாரம்பரிய ஓமானி கிராம வாழ்க்கையை பார்க்கலாம். அங்குள்ள குறுகிய தெருக்கள், பாரம்பரிய கட்டிடக்கலை, கலாச்சாரம் மற்றும் உள்ளூர் மக்கள் என ஏராளமான புதுவித அனுபவங்களை இங்கு ஆராய்ந்து மகிழலாம்.

13. பாவோபாப் மரங்கள்:

இங்கு வரும் பாரவையாளர்கள், பார்ப்பதற்கே கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாவோபாப் மரங்களின் தனித்துவமான வடிவங்கள் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும். தோஃபரின் மேற்குப் பகுதியில் மௌன சாட்சிகளாக நிற்கும் இந்த மரங்கள், பல நூற்றாண்டுகள் பழமையானவை ஆகும்.

14. ஃபிராங்கின்சென்ஸ் அருங்காட்சியகம்:

தோஃபரில் உள்ள இந்த அருங்காட்சியம், பார்வையாளர்களை ஒரு கலாச்சார மற்றும் வரலாற்று சுற்றுப்பயணத்திற்கு இட்டுச் செல்லும். இந்த அருங்காட்சியகம் ஃபிராங்கின்சென்ஸின் (Frankincense) வெவ்வேறு பயன்பாடுகள், வர்த்தகத்தில் அதன் முக்கியத்துவம் போன்றவற்றை காட்சிப்படுத்துகிறது. எனவே, பார்வையாளர்கள் விலைமதிப்பற்ற பிசின் கலாச்சார முக்கியத்துவம் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

15. ஓமன்-ஏமன் எல்லை:

ஓமன்-ஏமன் எல்லைக்கு அருகில் சலாலா ஒரு முக்கிய இடத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்த எல்லையை அணுக சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி கிடையாது, இருப்பினும் கரடுமுரடான நிலப்பரப்பு மற்றும் ஓமன் மற்றும் ஏமன் இடையே பகிரப்பட்ட வரலாறு போன்றவற்றை தெரிந்து கொள்ள சிறந்த வாய்ப்பு ஆகும்.

16. ஜபல் இத்தின்:

சலாலாவில் அமைந்துள்ள இயற்கை அதிசயமான இத்தின் மலைத்தொடர், அதன் உயரமான சிகரங்கள், பாறைகள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகளால் வகைப்படுத்தப்படுகிறது. ஆகவே, மலையேறுபவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கான சிறந்த இடமாக இது இருக்கும். அதுமட்டுமின்றி, வெளிப்புற சாகசங்களுக்கான வாய்ப்புகளையும் இது வழங்குகிறது.

17. சலாலா சூக்:

வெவ்வேறு பாரம்பரிய பொருட்களை வாங்குவதற்கென பரபரப்பான சலாலா சூக் உள்ளது. இந்த சந்தையின் குறுகலான சந்துகள் வழியாக அலைந்து திரிந்து, பாரம்பரிய கைவினைப்பொருட்கள், மசாலா பொருட்கள், வாசனை திரவியங்கள், ஜவுளிகள் மற்றும் உள்ளூர் உணவு வகைகள் போன்றவற்றை அலசி ஆராய்ந்து வாங்கலாம் மற்றும் கடைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே உலாவலாம்.

மேற்கூறிய அனைத்து இடங்களும், ஓமானின் சலாலாவில் பார்வையாளர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய இடங்களாகும். அழகிய சோலைகள், நீர்வீழ்ச்சிகள், மறைக்கப்பட்ட குகைகள், மலைத்தொடர் மற்றும் சாகச பயணங்கள் என சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்திழுக்க ஏராளமான மறக்கமுடியாத அனுபவத்தை சலாலா வழங்கி அங்கு செல்லும் சுற்றுலாவாசிகளை கவர்ந்திழுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article