கண் விழித்ததும் குடிக்கிற டீடாக்ஸ் வாட்டரில் தொடங்கி, காலை, மதியம், இரவு, இடையில் நொறுக்குத்தீனிகள் என எல்லாவற்றுக்கும் சமைக்காத உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கூட்டம் ஒன்று இருக்கிறது. எடைக்குறைப்பு, குடல் சுத்திகரிப்பு, முதுமையைத் தள்ளிப்போடுதல் என இத்தகைய உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவதற்கு ஆளுக்கு ஒரு காரணம் இருக்கலாம். சமைக்காத உணவுகளைச் சாப்பிடுவது எந்த அளவுக்கு ஆரோக்கியமானது, எல்லோருக்கும் ஏற்றதா? விளக்கமாகப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்.
“சமைக்காத உணவுகளைச் சாப்பிடுவதால் ஆரோக்கியம் மேம்படும், நோய்கள் வராது என்ற பரவலான எண்ணம் மக்களிடம் இருக்கிறது. சமைக்காத உணவுகள், உடலின் அமிலக்காரத் தன்மையை நடுநிலைப்படுத்தக்கூடியவை. ஆனாலும் சமைக்காத உணவுகள் சிறந்தவை என்ற பொதுக் கண்ணோட்டத்தில் எல்லாவிதமான உணவுகளையும் சாப்பிடுவதும் சரியானதல்ல. சமைக்காத உணவுகளைச் சாப்பிடும் முன் பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியம்.