Last Updated on: 16th September 2023, 10:29 pm
குவைத் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்கள் மற்றும் கடன்களை வசூலிப்பதற்காக குவைத் அரசானது பல கடுமையான விதிகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி, நிலுவையில் உள்ள அபராத தொகையை செலுத்தினால் தான் வெளிநாட்டவர்கள் தங்களின் தாய் நாட்டுக்கு செல்ல முடியும் என்ற விதிமுறையை ஏற்கனவே பிறப்பித்தது.
குவைத் அரசின் இந்த அதிரடி அறிவிப்பின் மூலம் நீண்ட காலமாக பில்லியன் கணக்கில் நிலுவையில் இருந்த அபராத தொகைகள் மற்றும் கடன்கள் குறுகிய நாட்களில் வசூலிக்கப்பட்டன. இந்நிலையில் தற்பொழுது குவைத் அரசு மீண்டும் புதிதாக ஒரு விதிமுறையை வெளியிட்டுள்ளது.
தற்போதைய இந்த அறிவிப்பின்படி, வெளிநாட்டவர்கள் தங்களுடைய வசிப்பிட விசாவினை புதுப்பிக்க வேண்டுமானால் நிலுவைத் தொகைகளை செலுத்திய பின்பே புதுப்பிக்க முடியும் என மீண்டும் ஒரு புது விதிமுறையை உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிமுறையானது ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 10, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
குவைத்தின் தற்காலிகப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் காலித் அல்-அஹ்மத் அல்-சபா அவர்களின் உத்தரவுகளுக்கு இணங்க, வசிப்பிட விவகாரங்களின் பொது நிர்வாகத்துடன் இணைந்து குவைத்தின் உள்துறை அமைச்சகம் இந்த கடன் வசூலிக்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த உள்ளது.
இந்த கடுமையான நடவடிக்கைகள் மூலம், நாட்டின் நிதி வளர்ச்சி மேம்படும் எனவும், பொதுமக்கள் தவறுகளை செய்வதற்கு யோசிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வெளிநாட்டவர்கள் தங்களுடைய விசாவினை புதுப்பிக்க விரும்பினால், சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலமாகவோ அல்லது “சஹேல்” விண்ணப்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமாகவோ தங்கள் நிலுவையில் உள்ள கடனைத் தீர்க்க வேண்டும்.
அபராதம் மற்றும் கடன்கள் தீர்க்கப்பட்ட பிறகுதான் வெளிநாட்டவர்களுக்கு விசா அளிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும், கடன்களை வசூலிப்பதில் குவைத் அரசு கடுமையான நடவடிக்கைகளை கடைபிடிப்பதால் பொதுமக்கள் விதி மீறல்களில் ஈடுபட வேண்டாம் என உள்துறை அமைச்சகம் குவைத் குடியிருப்பாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.