Last Updated on: 28th July 2023, 06:15 pm
பருவ கால தொற்றுக்களோடு சேர்த்து கண் நோய் தொற்றும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. டெல்லியில் மட்டுமே ஒரு நாளைக்கு 100 பேருக்கு மேல் இந்த கண் நோயால் பாதிக்கப்படுவதால் எய்ம்ஸ் மருத்துவனை அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல சென்னை உள்ளிட்ட இடங்களிலும் இது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
கண் நோய்க்கு காரணமாகும் அடினோ வைரஸ்
மழைக்காலத்தில் கண் நோய்கள் உண்டாவதற்கு அடினோ வைரஸ் என்னும் ஒரு வைரஸ் தான் காரணம். இந்த அடினோ வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டது.
இயல்பாகவே மழைக்காலத்தில் தட்ட வெப்பநிலையின் காரணமாகவும், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாலும் வைரஸ், பாக்டீரியா தொற்றுக்கள் மிக எளிதாகப் பரவும் தன்மை கொண்டிருக்கும். அப்படி மழைக்காலத்தில் வேகமாகப் பரவும் ஒருவகை வைரஸ் தான் இந்த அடினோ வைரஸ்
பிங்க் ஐ (மெட்ராஸ் ஐ) எப்படி பரவும்?
மெட்ராஸ் ஐ என்று சொல்லப்படும் பிங்க் ஐ பார்த்தாலே பரவி விடும் என்று பயப்படுவார்கள். ஆனால் அது அப்படியில்லை.
மெட்ராஸ் ஐ என்னும் பிங்க் ஐ – யால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கண்களை கைககளால் தொடக் கூடாது.
கைகளால் தொட்டுவிட்டு வேறு இடத்தில் கை வைக்கும்போது அந்த இடத்தில் கை வைக்கும் அடுத்த நபருக்குப் பரவக் கூடும். அதனால் தான் கண் நோய் வந்ததும் அவர்கள் கண்ணாடி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கண்களில் வடியும் திரவங்கள் மற்றும் அவற்றில் படிந்திருக்கும் வைரஸ்களினால் இது பரவுகிறது. அதனால் முடிந்தவரையில் பிங்க் ஐ பிரச்சினை வந்துவிட்டால் வீட்டில் அமைதியாக ஓய்வெடுப்பது நல்லது. அது மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க முடியும்.
பாதிக்கப்பட்டவர் மற்றவர்களைத் தொடும்போது கண்களில் இருந்து வரும் நீர்மத் துளிகள் உடலில் பட்டிருந்தால் அந்த பாக்டீரியா, வைரஸ் தொற்றுக்கள் மற்றவருகு்கும் எளிதாக பரவும். அதனால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.
மெட்ராஸ் ஐ அறிகுறிகள் என்ன?
மெட்ராஸ் ஐ என்னும் பிங்க் ஐ பாதிப்பு ஏற்படும் போது கீழ்வரும் அறிகுறிகள் உண்டாகும்.
கண்கள் சிவந்து போதல்,
கண்கள் மற்றும் அதன் இமைகளில் வீக்கம்,
கண்களில் நீர் வடிதல்,
கண்களில் எரிச்சல்,
கண்களின் நமைச்சல்,
போன்ற அறிகுறிகள் உண்டாகும். கண்களில் நீர்ம உற்பத்தி அதிகரிக்கும். அதனால் அதிகமாக கண்களில் இருந்து நீர் வடிந்து கொண்டே இருக்கும். அதனால் தான் மெட்ராஸ் ஐ வந்தவர்கள் தனியாக இருக்கவும் கண்களை தொடாமல் இருக்கவும் கண்ணாடி அணியவும் சொல்கிறார்கள்.
கண் நோயை தடுப்பது எப்படி?
இந்த கண் நோய் பெரியவர்கள், இளம் வயதினர், குழந்தைகள் என எல்லா வயதினருக்கும் வரலாம். ஆனால் குழந்தைகளுக்கு மிக அதிகமாகவும் எளிதாகவும் பரவுகிறது.
அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். கைகளை எங்காவது இடத்தில் வைத்து விட்டால் உடனே சோப்பு போட்டு கழுவி விட வேண்டும்.
கண்களைக் கைகளால் தொடக் கூடாது.
கண்ணாடி அணிய வேண்டும்.
மற்றவர்களுடைய டவல், கர்சீப், தலையணை ஆகியவற்றைப் பயன்படுத்தாதீர்கள்.
நீச்சல் குளம் உள்ளிட்ட பொது இடங்களைத் தவிர்ப்பது நல்லது.
மெட்ராஸ் ஐ என்று பிங்க் ஐ வந்துவிட்டால் உடனே மருத்துவரைச் சந்தித்து அவர் பரிந்துரைக்கும் மருந்தை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது. இதை உடனடியாக செய்ய வேண்டும். அப்போது தான் தொற்றை பரவாமலும் அதிகரிக்காமலும் தவிர்க்க முடியும்.
அதனால் கண் நோய் தொற்று ஏற்பட்டதும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
என்ன செய்யக் கூடாது?
மருத்துவர் பரிந்துரைக்கும் கண் மருந்துகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். இதில் பலரும் செய்யும் தவறு என்னவென்றால் கண் சம்பந்தப்பட்ட கண் வலி, கண் சிவத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அவர்களே மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவது தான். அந்த தவறை செய்யவே கூடாது.