Last Updated on: 29th July 2023, 07:24 pm
தேனில் கொம்புத்தேன், காட்டுத் தேன் இப்படி நிறைய சொல்வார்கள். ஆனால் அடிப்படையில் இரண்டு வகைகளின் அடிப்படையில் தேன் நமக்குக் கிடைக்கிறது. இயற்கையாக பூக்களில் இருந்து தேனீக்கள் கூட்டில் சேகரிக்கும் தேன் ஒருவகை. மற்றொன்று செயற்கையாக தேனீக்கள் வளர்த்து தேனை உருவாக்குவது. இரண்டு வகை தேனும் ஆரோக்கியமானவை தான். ஆனால் அவற்றை வாங்கும்போது சர்க்கரை அல்லது வெல்லப்பாகு சேர்க்காத சுத்தமான தேனா என்று பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும்.
தேனில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
தேனில் வைட்டமின்கள், புரதங்கள், மினரல்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.
ஒரு ஸ்பூனில் தேனில் (20 கிராம் அளவு)
கலோரிகள் – 58,
கொழுப்பு – 0
கார்போஹைட்ரேட் – 15.3 கிராம்,
ஃப்ரக்டோஸ் – 8.4 கிராம்,
குளுக்கோஸ் – 6.9 கிராம்,
புரதச்சத்து – 0.08 கிராம்,
தண்ணீர் – 3.5 கிராம்
அளவில் இருக்கின்றன.
உடலுக்கு ஆற்றலை தரும் தேன்
தேன் இயற்கையாகவே உங்களுடைய எனர்ஜியை அதிகரிக்க உதவி செய்யும். அதனால் காலை நேர பானங்களில் சர்க்கரை அல்லது மற்ற ஸ்வீட்னர்களுக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொள்வது நல்லது. பிரட்டுக்கு சர்க்கரை சேர்த்த ஜாமுக்கு பதிலாகவும் சேர்த்துக் கொள்ளலாம்.
இயற்கையான இனிப்பாக இது உடல் சோர்வைப் போக்கி சுறுசுறுப்பாக மாற்றும். குறிப்பாக காலையில் உடற்பயிற்சி செய்யும்போது உண்டாகிற உடல் சோர்வை போக்கி உடனடி ஆற்றலைக் கொடுக்கும்.
இருமலை குறைக்கும் தேன்
இருமலைப் போக்கும் பாட்டி வைத்தியங்களில் இந்த தேனும் ஒன்று. நாள்பட்ட இருமலையும் சரிசெய்யும் ஆற்றல் தேனுக்கு உண்டு.
தேனில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் தொண்டை மற்றும் சுவாசப் பாதையில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களை அழித்து இருமல் மற்றுமபருவ கால நோய்களை விரட்டும் தன்மை தேனில் உண்டு.
தூக்கத்தை மேம்டுத்தும் தேன்
தேன் தினமும் எடுத்துக் கொள்வது நல்ல தூக்கத்தை மேம்படுத்த உதவி செய்யும். குறிப்பாக இரவில் தூங்கச் செல்லும் முன்பாக ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்.
தேன் செரட்டோனினை உற்பத்தி செய்யும். இந்த செரட்டோனினை உடல் மெலடோனினாக மாற்றும். இந்த மெலடோனின் தான் தூக்கத்தை மேம்படுத்த உதவி செய்யும்.
காயங்களை ஆற்றும் தேன்
தேனில் அதிக அளவு குளுக்கோஸ் மற்றும் ஃபரக்டோஸ் உள்ளது. இதை சருமத்தில் உள்ள புண் மற்றும் காயங்களின் மீது அப்ளை செய்வதால் அது காயங்களில் உள்ள கெட்ட நீரை உறிஞ்சி வேகமாக ஆறச் செய்யும்.
இதிலுள்ள ஹீலிங் பண்பு மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் காயங்களில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து வேகமாக ஆறு உதவி செய்யும்.
நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் தேன்
தேனில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் ஆன்டி பாக்டீரியல் பண்புகளும் அதிகமாக இருப்பதால் இது ஜீரண ஆற்றலை மேம்படுத்தி நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராட உதவி செய்கிறது. அதனால் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறுடன் தேன் சேர்த்து குடிப்பது உடலை வலுப்படுத்தவும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவும்.
ஹேங்ஓவரை சரிசெய்யும் தேன்
ஹேங்ஓவர் சமயங்களில் தலைபாரம், தாகம், குமட்டல், தொண்டை வறட்சி, போன்ற பல பிரச்சினைகள் இருக்கும். இவற்றை சரிசெய்ய என்னென்னவோ வீட்டு வைத்தியத்தை முயற்சித்திருப்பீர்கள். தேன் மிக எளிதாக உங்களுடைய ஹேங்ஓவரை சரிசெய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம்.ஹேங்ஓவராக இருக்கும் சமயத்தில் இரண்டு ஸ்பூன் அளவு தேன் எடுத்து சாப்பிட உடனடியாக மெட்டபாலிசத்தை தூண்டி ஹேங்ஓவரை சரிசெய்யும்.
இதய நோய்களை தடுக்கும் தேன்
தேனில் பாலிபோனிக் என்னும் ஆன்டி ஆக்சிடண்ட் அதிக அளவில் இருக்கிறது. இதை தினமும் எடுத்துக் கொள்ளும் போது இதய நோய் ஆபத்து ஏற்படாமல் தடுக்கும்.
ரத்தக் குழாய் மற்றும் ரத்தத்தில் கெட்ட கொலஸ்டிரால் (எல்டிஎல்) படிவதைத் தடுத்து இதய நோய் ஆபத்தைக் குறைக்கும்.
எடையை குறைக்க உதவும் தேன்
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் அல்லது வெதுவெதுப்பான எலுமிச்சை நீரில் தேனை சேர்த்துக் குடித்து வர அது அடிவயிறு உள்ளிட்ட பகுதிகளில் தேங்கும் கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவி செய்யும்.
மேலும் இதிலுள்ள ஆன்டி – செல்லுலாய்டு பண்புகள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து உடல் எடையை குறைக்க உதவி செய்யும். அதேசமயம் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இதில் கலோரிகள் மிக அதிகம்.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தேன்
சரும வறட்சியைப் போக்கி நல்ல மாய்ஸ்ச்சரைஸிங்காக வைத்துக் கொள்வதற்கு தேன் மிக அற்புதமான தீர்வு.
சருமத்தில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களை அழித்து சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், காயங்கள் ஆகியவற்றைச் சரிசெய்து சருமத்தை மென்மையாக்கும் பண்பு கொண்டது தேன். இதை உங்களுடைய க்ளன்சர், மசாஜ் க்ரீம், மாய்ஸ்ச்சரைஸர், பேஸ்பேக் என எல்லாவற்றிலும் கலந்து பயன்படுத்த முடியும்.