Last Updated on: 12th August 2023, 01:10 pm
குழப்பம் அல்லது தடுமாற்றத்தால் கொஞ்சம் நேரம் வீணாவது எல்லாம் சகஜமானது தான். ஆனால் சிலருக்கு முடிவெடுக்க முடியாமல், தள்ளிப்போடுவது பிரச்சனையாக இருக்கலாம். இதை எப்படி எதிர்கொள்வது என அகிலா ரங்கண்ணா வழிகாட்டுகிறார்.
தள்ளிப்போடும் பழக்கத்தில் இருந்து விடுபட இரண்டு வழிகள்:
1) அட்டவணையை உருவாக்குங்கள்:
செய்ய வேண்டிய செயல்களை பட்டியலிடுவது உங்களின் சிறந்த நண்பனாக அமையும். இதன் மூலம் செயல்களுக்கு முன்னுரிமை அளித்து, கெடுவுக்குள் எல்லாவற்றையும் செய்து முடிக்கலாம். செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டு, அவற்றுக்கான கெடுவை உருவாக்கி, கால அளவையும் குறிப்பிடுங்கள்.
எளிதாக செய்து முடிக்கக் கூடிய செயல்களைவிட, நீங்கள் தள்ளிப்போட்டு வரும் செயல்கள் மீது முழு கவனமும் இருக்க வேண்டும். கடினமான செயல்களை முதலில் எதிர்கொள்ளுங்கள். “பட்டியல் போட்டுக் கொள்வதும், செய்து முடித்தவுடன் ஒவ்வொரு செயலாக டிக் செய்வதும், நிறைய விஷயங்களை செய்து முடித்த திருப்தியை தருகிறது” என்கிறார் ஐ.டி ஆலோசகரான பிரியா ஜா. “பட்டியலில் எண்ணிக்கை குறைவது, மற்றபடி நான் தள்ளிப்போடக்கூடிய செயல்களை நிறைவேற்ற உத்வேகம் அளிக்கிறது” என்கிறார் அவர்.
2) பெரிய பிரச்சனை, சிறிய தீர்வு:
சில நேரங்களில் ஒரு செயலை நிறைவேற்றுவது கடினமாக தோன்றுவதால் அதை தள்ளிப்போட நேரலாம். பெரிய செயலை சின்னச் சின்ன பகுதிகளாக பிரித்துக்கொண்டால் அவை மிகவும் எளிதாக மாறிவிடும்.
சமையலறையை சுத்தம் செய்ய விரும்பினால் எங்கிருந்து துவங்குவது எனத் தெரியாது. இதை ஒவ்வொரு அடியாக அணுகுங்கள். முதலில் பாத்திரங்களை சுத்தம் செய்யவும். பின்னர் பொருட்களின் அலமாரியை சுத்தம் செய்யுங்கள், அடுத்ததாக ஃபிரிட்ஜை சுத்தம் செய்யவும், மளிகை சாமான்களை அடுக்கி வைக்கவும், தரையை சுத்தம் செய்யவும். இப்படி ஒவ்வொரு செயலாக செய்து முடிக்கலாம். இது மிகவும் எளிதாக இருக்கும்.