Last Updated on: 1st January 2024, 08:24 pm
பூனைகள்: பொதுவாக, சுத்தமான விலங்கு என்றாலே அனைவருக்கும் முதலில் தோன்றுவது பூனைகள்தான். பூனைகள் குட்டியாக இருக்கும்போதே அதனுடைய அம்மாவிடம் இருந்து சுத்தமாக இருப்பதை கற்றுக்கொள்ளும். மேலும், பூனையின் உடம்பில் இயற்கையாகவே உடலை சுத்தப்படுத்தும் சுரப்பிகள் உள்ளன. அதேபோல், பூனையின் நாக்கின் வடிவம் முடிகளை சீராக வைத்துக்கொள்ள உதவும். ஆகையால்தான், பூனைகள் தங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளும்.
முயல்: பூனைகளைப் போலவே முயல்களும் தங்களது பாதம் மற்றும் நாக்கின் மூலம் உடம்பை சுத்தம் செய்துக்கொள்ளும்.
நாம் எப்படி தினமும் குளிக்கிறோமோ அதேபோல், முயல்களும் தம்மை தினமும் சுத்தப்படுத்திக்கொள்ளும். அதேபோல், தனது படுக்கை இடத்தையும், உணவு உட்கொள்ளும் இடத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளும்.
பனிக் கரடி: பனிக் கரடிகள் தங்களை சுத்தமாக வைத்துக்கொள்வதை அவசியமான ஒன்றாக நினைக்கும். ஆம்! ஏனெனில் அது பனிப் பிரதேசத்தில் வாழ்வதால் முடிகள் இயற்கையாகவே அதிகம் இருக்கும். அதனால் அந்த முடிகளை தினமும் சுத்தம் செய்வது அவசியமாகிறது.
அசுத்தமாக இருந்தால் அரிப்புகள் ஏற்படும். இதற்காகவே பனிக் கரடி தினமும் கடலில் குளித்து விட்டு பனியில் படுத்து புரண்டு சுத்தம் செய்துக்கொள்ளும். மேலும், இது தினமும் குளிப்பதால்தான் உடல் வெப்பத்தை உணரவும் செய்கிறது.
டால்பின்: ‘பொதுவாக, நீரில் வாழும் உயிரினங்கள் எப்போதும் சுத்தமாகத்தானே இருக்கு’ம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், கடலிலும் மாசுக்கள் அதிகம் உள்ளன. மனிதர்களாலும் சில சமயம் இயற்கையினாலும் கடலில் மாசு ஏற்படும். ஆகையால், கடலிலும் சில உயிரினம்தான் சுத்தமாக இருக்கும். அதில் முதலாக இருப்பது டால்பின்.
சில ஆராய்ச்சியாளர்கள் என்ன கூறுகின்றனர் என்றால், ‘டால்பின் குதித்து விளையாடுவதே உடம்பில் இருக்கும் ஒட்டுண்ணிகள், அழுக்குகள் நீங்கத்தானாம். மேலும், டால்பின் மிகவும் அறிவாற்றல் மிக்க ஒரு கடல் விலங்கு என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.‘
நமக்கும் விலங்குகளுக்கும் உள்ள ஒரு வித்தியாசம், நாம் சுத்தமாக இருப்பதுதான்’ என்று சிலர் கூறுவார்கள். ஆனால், நம்மை விட சில உயிரினங்கள் தம்மை சுத்தமாக வைத்துக்கொள்ளும் என்பதே உண்மை.