Last Updated on: 12th July 2023, 09:58 am
இந்தியாவின் பரபரப்பான விமான நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு சோதனைகளை விரைவாகவும், பிழையின்றியும் செய்ய, இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) சோதனை நேரத்தை பாதியாக குறைக்கும் வகையில் முழு உடல் ஸ்கேனர்கள் பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இது குறித்து AAI ன் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “தற்போது, ஒரு பயணியை கைமுறையாக சோதனை செய்ய சராசரியாக 30 வினாடிகள் ஆகும், ஆனால் இந்த மில்லிமீட்டர்-அலை தொழில்நுட்ப அடிப்படையிலான முழு உடல் ஸ்கேனர்களை பயன்படுத்துவதன் மூலம், அதை 15 வினாடிகளில் செய்ய முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற பரபரப்பான விமான நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு, இந்த உடல் ஸ்கேனர்களைப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த சோதனைகளின் கண்காணிப்பு சிவில் விமான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணியகத்திற்கு (BCAS) அனுப்பப்பட்டு, விரிவான கூட்டங்களுக்குப் பிறகே ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக கூறுகையில், “ஃபுல் பாடி ஸ்கேனர்களின் சோதனைகளின் போது, தவறான அலாரத்தின் குறைபாடுகள் இருந்தது, மற்றும் சில பொருட்களை அதனால் கண்டறிய முடியவில்லை. அது சமாளிக்கப்பட்டு, விமான நிலையங்களில் செயல்படும் பாதுகாப்பு நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப இந்த புதிய சோதனைகள் வெற்றி பெற்றுள்ளன” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“மெட்டல் டிடெக்டரைப் போன்று இல்லாமல், மில்லிமீட்டர் அலை அடிப்படையிலான இந்த முழு உடல் ஸ்கேனர், பயணிகளின் ஆடைகளுக்கு அடியில் மறைந்திருக்கும் திரவம் அல்லது பிளாஸ்டிக்கைக் கண்டறிய உதவும். இது உடல் வரையறைகளின் அடிப்படையில் செயல்படுகிறது மற்றும் உடலில் மறைத்து வைக்கப்படும் பொருட்களைக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது” எனவும் அதன் செயல்பாடுகளை விளக்கியுள்ளார்.
அத்துடன், AAI ஆல் இயக்கப்படும் பல்வேறு விமான நிலையங்களில் 131 முழு உடல் ஸ்கேனர்கள் நிறுவப்படும் என்றும் கூறிய அவர், “அங்கீகரிக்கப்பட்ட பாடி ஸ்கேனர்கள் துல்லியமானவை, மற்றும் ஆரோக்கியத்திற்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது. இது விரைவான மற்றும் துல்லியமான பாதுகாப்பு அனுமதியை உறுதி செய்யும், இதன் விளைவாக பயணிகளுக்கு மென்மையான பாதுகாப்பு சோதனைகள் கிடைக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு முழு உடல் ஸ்கேனரின் விலை சுமார் 40 மில்லியன் ரூபாய் என்றும், மொத்தம் 131 யூனிட்கள் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியதுடன், விரைவில் அதற்கான டெண்டர் விடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில், இந்த டெண்டருக்கான பட்டியலில் சில ஐரோப்பிய நிறுவனங்கள் AAI-யை அணுகியுள்ளதாகவும் கூறியுள்ளார். இது தவிர மேலும் 600 புதிய டூயல் வியூ எக்ஸ்ரே ஹேண்ட் பேக்கேஜ் ஸ்கேனர்களையும் AAI வாங்கவுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.