Last Updated on: 10th August 2023, 08:42 am
உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த சூழலில் தற்போது அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் EG.5 என்ற புதிய திரிபு பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறுகையில், “அமெரிக்கா மற்றும் பிரிடனில் EG.5 என்ற புதிய கரோனா திரிபு பரவி வருகிறது. இந்த புதிய திரிபு அபாயகரமானதாக திடீரென தொற்று பரவலையும் உயிர்ப்பலிகளையும் அதிகரிக்கக் கூடியதாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயப்படுகிறது. இது தொடர்பாக இன்று அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
இந்தச் சூழலில் உலக நாடுகள் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, மரபணு பகுப்பாய்வு விவரங்களை உடனுக்குடன் உலக சுகாதார நிறுவனத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். குறிப்பாக உயிர்ப்பலி ஏதும் இருந்தால் அதுபற்றிய விவரமும், வைரஸ் தாக்கத்தால் ஏற்படும் உபாதைகள் தொடர்பான விவரங்களையும் அளிக்க வேண்டும். அது மட்டுமல்லாது தொடர்ந்து தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.