Last Updated on: 30th July 2023, 12:08 pm
2024ம் ஆண்டுக்கான அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹிர்ஷ் வர்தன் சிங் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி நபர் போட்டி
2024ம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு கட்சிகள் இப்போதே தங்களது ஆயத்தப் பணிகளை தொடங்கிவிட்டன. பல கட்சிகள் தங்களது ஜனாதிபதி தேர்தல் போட்டியாளர் யார் என்பதை தேர்ந்தெடுக்க பல பெயர்களை பரிசீலனை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்திய-அமெரிக்க பொறியாளர் ஹிர்ஷ் வர்தன் சிங்(Hirsh Vardhan Singh) குடியரசு கட்சி சார்பில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.
நிக்கி ஹேலி மற்றும் விவேக் ராமசாமி ஆகியோருக்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியிட இருக்கும் 3வது இந்திய வம்சாவளியை சேர்ந்த மூன்றாவது நபர் ஹிர்ஷ் வர்தன் சிங் ஆவார்.
ஹிர்ஷ் வர்தன் சிங் வெளியிட்ட வீடியோ
இது தொடர்பாக ஹிர்ஷ் வர்தன் சிங் வெளியிட்ட வீடியோவில், தான் “வாழ்நாள் முழுவதுமான குடியரசுவாதி” மற்றும் “அமெரிக்காவின் முதல் பழமைவாதி” நியூ செர்ஜி குடியரசு கட்சியின் பழமைவாதத்தை மீட்டெடுக்க பணியாற்றியவன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “கடந்த சில வருடங்களாக ஏற்பட்டுள்ள மாற்றங்களை திரும்ப பெற்று அமெரிக்காவின் மதிப்புகளை மீட்டெடுக்க நமக்கு வலிமையான தலைமை தேவைப்படுகிறது, அதற்காகவே 2024ம் ஆண்டுக்கான அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் நான் போட்டியிட முடிவு செய்து இருக்கிறேன்” என தன்னுடைய 3 நிமிட வீடியோவில் கூறியுள்ளார்.
அத்துடன் ஹிர்ஷ் வர்தன் சிங் அதிகாரப்பூர்வமான வியாழக்கிழமை பெடரல் தேர்தல் ஆணையத்தில் தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார் என ஹில் செய்தித்தாள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
குடியரசுவாதிகள் 2024ம் ஆண்டு ஜூலை 15 முதல் 18ம் திகதியில் விஸ்கான்சினின் மில்வாக்கியில் சந்தித்து முறையாக தங்களது அடுத்த ஜனாதிபதி குடியரசு கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.