Last Updated on: 13th June 2023, 09:31 am
எலன் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் 14 வயது சிறுவன் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ பகுதியைச் சேர்ந்தவர் கைரான் குவாசி. வயது 14. சிறு வயதிலேயே மிகவும் அறிவுக் கூர்மையுடன் இருந்ததால் 11 வயதிலேயே அமெரிக்காவின் கைரான் கிளாரா பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்தார்.
மேலும், அவரது திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளவும் அவருக்கு பல்கலைக்கழகம் அனுமதி அளித்தது.
ஆராய்ச்சிக்குப் பிறகு இன்டெல் லேப்சா AI (செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்) ஆராய்ச்சி கூட்டுறவு உறுப்பினராக கைரான் பயிற்சி பெற்றார். 2022-ஆம் ஆண்டில், சைபர் நுண்ணறிவு நிறுவனமான பிளாக்பெர்ட் AI-இல் இயந்திரக் கற்றல் பயிற்சியாளராக நான்கு மாதங்கள் பணியில் இருந்தார்.
இந்த நிலையில், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் இன்ஜினீயரிங் பிரிவில் அவருக்கு பணி கிடைத்துள்ளது. இது குறித்து கைரான் குவாசி தனது சமூக வலைதள பக்கத்தில், ”என்னுடைய அடுத்த ஸ்டாப் ஸ்பேஸ் எக்ஸ். உலகிலேயே மிகவும் சிறப்பான நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆக இணைந்து ஸ்டார்லின்க் இன்ஜினீயரிங் டீம் உடன் பணியாற்ற உள்ளேன்.
சிறந்த நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸில் என்னுடைய வயதை பொருட்படுத்தாமல் திறமையை ஆய்வு செய்து பணியில் சேர்த்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
14 வயதில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ள சிறுவனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.