அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்தாண்டு நடக்கும் நிலையில், இதில் குடியரசு கட்சி தரப்பில் விவேக் ராமசாமி அனைவரையும் கவனிக்க வைக்கும் முகமாக மாறியிருக்கிறார். யார் இவர்.. இவருக்கும் தமிழுக்கும் உள்ள கனெக்ஷன் என்ன என்பதைப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற இருக்கிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை வேட்பாளர் தேர்வே ரொம்பவே சுவாரசியமாக நடக்கும். அங்குக் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி மட்டுமே பிரதானமாக இருக்கிறது.
அப்போது இரு கட்சியின் சார்பிலும் போட்டியிடப் பலரும் விருப்பம் தெரிவிப்பார்கள்.. அப்போது அவர்களுக்கு உள்கட்சி தேர்தல் நடத்தப்படும் உட்கட்சி தேர்தலில் யாருக்கு ஆதரவு அதிகம் இருக்கிறதோ.. அவர்களே அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள்.
அதிபர் தேர்தல்: அடுத்தாண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் அங்கு ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பைடன் மீண்டும் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியாகவிட்டது. இருப்பினும், குடியரசு கட்சி சார்பில் பலரும் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். இதில் டிரம்பிற்கு தான் ஆதரவு அதிகமாக இருக்கிறது என்ற போதிலும், மற்றொருவர் அங்கு டிரம்பிற்கே போட்டி கரும் வகையில் பிரசாரத்தில் இறங்கியுள்ளார். அவர் தான் விவேக் ராமசாமி.
விவேக் ராமசாமியின் பேச்சுகள் அங்குள்ள குடியரசு கட்சியினர் மத்தியில் அவரது ஆதரவை அதிகரித்து வருகிறது. குடியரசு கட்சி சார்பில் பலரும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், விவேக் ராமசாமி அனைவரையும் தாண்டி தனியாகத் தெரிகிறார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் பலரு் டிரம்பை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால், விவேக் ராமசாமி எடுத்துள்ள வேறு விதமான பிரசாரத்தைக் கையில் எடுத்துள்ளார். அவரது பிரசார யுக்தியைப் பார்க்கும் முன்பு யார் இவர் என்பதைப் பார்க்கலாம்..
யார் இந்த விவேக் ராமசாமி: அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் சின்சினாட்டி என்ற பகுதியில் 1985ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9இல் பிறந்தவர் விவேக் ராமசாமி.. இவரது தந்தை ராமசாமி, தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்.. இவர் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்தவர். அதேபோல இவரது தாய் கீதா மைசூர் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவரது குடும்பத்தினர் கேரளாவைச் சேர்ந்த தமிழ் பேசும் பிராமணர்கள் ஆவர்.
கேரளாவில் வசித்து வந்த அவர்கள் விவேக் பிறக்கும் முன்பே அமெரிக்காவுக்குக் குடியேறிவிட்டனர். அமெரிக்காவின் ஹார்வர்ட் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற விவேக் ராமசாமி, அங்குள்ள யேல் சட்டக் கல்லூரியிலும் படித்தவர். இவரது மனைவி அபூர்வா ராமசாமி, இருவரும் யேல் கல்லூரில் ஒன்றாகப் படித்தவர்கள். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஏன் முக்கியம்: குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் பலரும் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அவர்களைத் தாண்டி விவேக் ராமசாமி தனியாகத் தெரிகிறார். டிரம்ப் America first என்ற கொள்கையை முன்வைத்துள்ள நிலையில், ராமசாமி அதையே மேலும் தீவிரமாகப் பேசுகிறார். மேலும், இவரது பல அடிப்படைவாத கருத்துகள் டிரம்பை போலவே பழமைவாதிகள் மத்தியில் இவருக்கு மிகப் பெரிய ஆதரவை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் தன்பால் ஈர்ப்பாளர்களை கடுமையாக எதிர்க்கும் ராமசாமி, இது அமெரிக்காவுக்கே நெருக்கடியாக மாறி இருப்பதாகவும் அமெரிக்காவின் எலைட் மக்கள் திட்டமிட்டு இந்த கலாச்சார கேன்சரை பரப்புவதாகவும் சாடியுள்ளார். அதேபோல பருவமழை மாற்றம் என்பது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியிருக்கும் நிலையில், அனைத்து குடியரசு கட்சியினரைப் போல இவரும் அதை ஏற்கவில்லை. பருவநிலை மாற்றத்தை மூட நம்பிக்கை என்றே அவர் குறிப்பிடுகிறார்.
குடியரசு கட்சியில் டிரம்பிற்கு தான் இப்போது ஆதரவு அதிகமாக இருக்கிறது.இருப்பினும் 38 வயதில் முதல்முறையாகத் தேர்தலில் இறங்கியுள்ள ராமசாமி இரண்டாம் இடத்தில் வந்து கவனிக்க வைக்கிறார். ஒரு வேலை டிரம்பிற்கு கடைசி நேரத்தில் எதாவது பின்னடைவு ஏற்பட்டால் விவேக் ராமசாமி அதிபர் ரேஸில் டாப்பில் வர வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.