Last Updated on: 8th June 2023, 09:19 am
கடந்த ஆண்டு அமெரிக்கா உலகளவில் வழங்கிய மாணவர்களுக்கான விசாக்களில் ஐந்தில் ஒன்று இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டது என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார்.
2022-ல் 1,25,000 இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா விசா வழங்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் இந்தியா மாணவர்களின் பங்கு 21% ஆக உள்ளது என்று அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க கல்வி விசா தொடர்பான நேர்காணல் சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களில் நேற்று நடைபெற்றது. படிப்புக்காக அமெரிக்காவுக்கு செல்ல விசாவுக்கு விண்ணப்பித்திருந்த 3,500 இந்திய மாணவர்களிடம் அமெரிக்க தூதரக அதிகாரிகள் நேர்காணல் நடத்தினர்.
இந்நிகழ்வையொட்டி, எரிக் கார்செட்டி பேசுகையில், “வேறு எந்த நாட்டைவிடவும் அதிக இந்திய மாணவர்கள் படிப்புக்காக அமெரிக்கா வருகின்றனர். 2022-ல் உலக அளவில் விநியோகிக்கப்பட்ட மாணவர்களுக்கான அமெரிக்க விசாக்களில் ஐந்தில் ஒன்று இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.