பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் அரிசியின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, அரிசி வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் மத்திய அரசு கடந்த ஜூலை 20ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்திய சந்தையில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், உள்நாட்டு சந்தையில் விலை உயர்வைக் குறைக்கவும் பாஸ்மதி அல்லாத அரிசியின் ஏற்றுமதிக்கு உடனடியாகத் தடை விதிக்கப்படுகிறது,” என்று தெரிவித்திருந்தது.
உணவுப் பாதுகாப்புத் தேவைகளின் கீழ் மத்திய அரசால் அனுமதிக்கப்படும் வகையிலான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்குத் தடை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அரிசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்றும் அரிசியின் சில்லறை விற்பனை விலை ஓராண்டில் 11.5 சதவீதமும் கடந்த ஒரு மாதத்தில் 3% சதவீதமும் உயர்ந்துவிட்டதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
டெக்சாஸில் இந்திய அரசின் தடைக்கு முன்பு 10 கிலோ அரிசியின் விலை 20 டாலராக(ரூ.1639.81) இருந்தது. தற்போது 30 டாலராக(ரூ.2459.72) உயர்ந்துவிட்டது. அரிசியை வாங்குவதற்காக கடைகளின் வாசலில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,